வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சுரங்க உரிமத்தை ரத்து செய்யக்கோரி, சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில், மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசு எந்தவொரு சுரங்கம் அமைக்கவும் உரிமம் வழங்கக்கூடாது, ஏலம் விடக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. இந்த தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்தார்.
இதனைத்தொடர்ந்து இந்த தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, டங்ஸ்டன் சுரங்கத்திற்கு 10 மாத காலமாக திமுக அரசு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், மக்கள் போராட்டத்தால் வேறு வழியின்றி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியதாக சாடினார்.
ஆரம்ப காலத்தில் ஒப்பந்த புள்ளி கோரும்போதே, விவரத்தை மத்திய அரசிடம் தெரிவித்திருந்தால் சுரங்கத்திற்கான ஏலத்தை தடுத்திருக்கலாம் என கூறிய எடப்பாடி பழனிசாமி, இது தொடர்பாக திமுக எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி.க்கள் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததாக விளக்கம் அளித்தார்.
அப்போது குறுக்கிட்ட எடப்பாடி பழனிசாமி, மாநிலத்தின் உரிமை பறிபோகும் போது, திமுக எம்.பி.க்கள் அவையை ஒத்தி வைக்கும் அளவுக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தாம் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கம் திட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என உறுதிப்பட கூறினார். மேலும், மாநில அரசு இதற்கு அனுமதி கொடுக்காது எனவும், அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையடுத்து, டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தனி தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு கொடுப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன் மூலம் இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறியது. அதேபோல் பாஜகவை தவிர்த்து மற்ற கட்சிகள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது.