தமிழ்நாட்டின் 2026–27 பட்ஜெட் அறிக்கையில், நிதியமைச்சர் மரியா வில்சன் அரசு மேற்கொள்ளவிருக்கும் திட்டங்களையும், அவற்றின் நோக்கம் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடுகளையும் வாசித்து வருகிறார்.
அந்த வகையில், பெண்களின் திருமண உதவிக்காக அறிவிக்கப்பட்ட 'அண்ணனின் சீர்' என்ற புதிய திட்டம் கவனம் பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, திருமணம் நடைபெறும் பெண்களுக்கு அரசின் சார்பில் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப் புடவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி, 8 கிராம், அதாவது ஒரு சவரன் (22 காரட்) தங்கத்தின் விலை ரூ.1,06,880. இதனுடன் வழங்கப்படும் பட்டுப் புடவை குறைந்த விலையில் வாங்கப்பட்டாலும் ரூ.3,000 முதல் ரூ.6,000 வரை செலவாகலாம். எனவே, ஒரு பெண்ணுக்கு ஆகும் செலவு சுமாராக ரூ.1,10,000 எனக் கணிக்கலாம்.
இந்த அடிப்படையில் பார்த்தால், ஒரு ஆண்டுக்கு சுமாராக 73,800 பெண்கள் இந்தத் திட்டத்தில் பயனடையலாம். தமிழ்நாட்டில் ஒரு ஆண்டுக்கு எத்தனை திருமணங்கள் நடைபெறுகின்றன, எத்தனை திருமணங்கள் பதிவு செய்யப்படுகின்றன என்பது குறித்து அதிகாரப்பூர்வ தரவுகள் இல்லை.
ஆண்டுக்கு சுமார் 3 முதல் 4 லட்சம் திருமணங்கள் நடைபெறுவதாக அனுமானிக்கப்படுகிறது. எனவே, இந்தத் திட்டம் பல்வேறு தகுதி நிபந்தனைகளுடன் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.
இதுமட்டுமல்லாமல், தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக மட்டுமே நிலையாக உள்ளது. ஆனால், இந்த நிலைத்தன்மை நீடிக்காது என்பதே பொருளாதார வல்லுநர்களின் கருத்து. தங்கத்தின் விலை அடுத்த சில மாதங்களில் அதிகரிக்கும்பட்சத்தில், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது இன்னும் சவாலானதாக மாறக்கூடும்.
திருமணத்தின் போது பெண் வீட்டார் தங்கம் வழங்கும் பிற்போக்கு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதாகவும் சமூக ஆர்வலர்களால் கவலை எழுப்பப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.