தமிழ்நாடு

முன்கள பணியாளர்களுக்கு தேவையான நிவாரணங்களை தமிழக அரசு வழங்குகிறது.! உயர்நீதிமன்றம் பாராட்டு.! 

Malaimurasu Seithigal TV

இறந்துபோன முன்கள பணியாளர்களின் குடும்பங்களில் அரசு வேலை வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த ஜலாலுதீன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.  அதில், "தமிழ்நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது வரை 89 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்த மருத்துவர் சண்முகப்பிரியா 8 மாத கருவுற்று இருந்த நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார். இதேபோல் வேலூர் பகுதியை சேர்ந்த செவிலியர் பிரேமா சென்னையை சேர்ந்த செவிலியர் இந்திரா ஆகியோர் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.

கொரோனா நோய் தொற்றின் காரணமாக முன்கள பணியாளராக இருக்கும் மருத்துவர், செவிலியர், காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர் ஆகியோர் பலர் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்து வருகின்றனர். இவர்களை இழந்த குடும்பத்தினர் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர் தற்போது வரை தமிழக அரசு இவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

எனவே, மருத்துவர் உயிரிழந்தால் 50 லட்சம், செவிலியர் மற்றும் காவல்துறையினர் உயிரிழந்தால் 25 லட்சம், தூய்மைப் பணியாளர் உயிரிழந்தால் 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இதனால், முன்கள பணியாளர்களான மருத்துவர் உயிரிழந்தால் 50 லட்சம், செவிலியர் மற்றும் காவல்துறையினர் உயிரிழந்தால் 25 லட்சம், தூய்மைப் பணியாளர் உயிரிழந்தால் 10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது..

அந்த விசாரணையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த முன்கள பணியாளர்களுக்கு தமிழக அரசு தேவையான நிவாரணங்களை வழங்கி வருகின்றது என்றும், இது மாநில அரசின் கொள்கை ரீதியான முடிவு. எனவே நீதிமன்றம் இதில் புதிதாக உத்தரவு பிறப்பிக்க விரும்பவில்லை எனக்கூறி இந்த வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்