போக்சோ வழக்கை முறையாக விசாரிக்காததால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 9 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட மாநில மனித உரிமை ஆணையம், இந்த வழக்கை டி.எஸ்.பி. அந்தஸ்து அதிகாரியை நியமித்து மீண்டும் விசாரிக்கவும் பரிந்துரைத்துள்ளது.
15 வயது சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ளியதாக, 2022ம் ஆண்டு சிறுமியின் தந்தை, வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது சம்பந்தமாக போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை, முறையாக விசாரிக்காத அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் அப்போதைய ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சிறுமி சார்பில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த புகார் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவுக்கு உத்தரவிடப்பட்டது.அதன்படி விசாரணை நடத்திய புலன் விசாரணைப் பிரிவு தாக்கல் செய்த அறிக்கையில், வழக்கு தொடர்பான ஆவணங்கள் தாமதமாக நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமியை தாமதமாக மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கியதாகவும், சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கவில்லை எனவும், இறுதியாக வழக்கு முடித்து வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி எஸ்.மணிக்குமார் மற்றும் உறுப்பினர் வி.கண்ணதாசன் அடங்கிய அமர்வு, வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ததில், வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் உள்ளிட்டோர், பாதிக்கப்பட்ட சிறுமியின் வாழ்க்கையில் விளையாடி உள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது. மகளிர் போலீசார், சட்டப்படி தங்கள் கடமையை செய்யாமல் புறக்கணித்துள்ளதன் மூலம் மனித உரிமையை மீறியுள்ளனர் என்பது நிரூபனம் ஆகியுள்ளதால், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 9 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
இந்த தொகையை அப்போதைய ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களிடமிருந்து வசூலித்து கொள்ளவும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்த மனித உரிமை ஆணையம், இந்த போக்சோ வழக்கை, டி.எஸ்.பி., அந்தஸ்து அதிகாரியை நியமித்து மீண்டும் விசாரணை செய்து, மூன்று மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.