சென்னை : முக்குலத்தோர் ஓட்டுக்களை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பல விதங்களில் ஆலோசித்து, காய் நகர்த்தி வரும் நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இதனால் மற்ற கட்சி ஆடிப்போய் உள்ளன.
முக்குலத்தோர் ஓட்டுக்கள் :
கவுண்டர் சமுதாய ஓட்டுக்கள் தனக்கு ஆதரவாக இருந்தாலும், முக்குலத்தோர் சமுதாய ஓட்டுக்களை எப்படியாவது பெற்று விட வேண்டும் என்று தான் இபிஎஸ் தரப்பும், அதிமுக.,வின் முக்கிய தலைவர்களும் முயற்சி செய்து வருகிறார்கள். ஓபிஎஸ், தனியாக விலகி சென்ற பிறகு முக்குலத்தோர் சமுதாய ஓட்டுக்களை பெறுவது அதிமுக.,விற்கு பெரும் சாவாலான விஷயமாக இருந்து வருகிறது. ஆனால் ஓபிஎஸ்.,ஐ மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளாமலேயே முக்குலத்தோர் ஓட்டுக்களை பெற்று விட வேண்டும் என அதிமுக முயற்சி செய்து வருகிறது.
தீவிரம் காட்டும் பாஜக :
மற்றொரு புறம் பாஜக.,வும் முக்குலத்தோர் ஓட்டுக்களை பெறுவதற்கு தான் குறி வைக்கிறது. அதனால் தான் மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கி விட்டு, முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த நயினார் நாகேந்திரனை மாநில தலைவராக நியமிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இருந்தாலும் அண்ணாமலை வந்த பிறகு தான் தமிழகத்தில் இந்த அளவிற்கு பாஜக.,வின் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்பதால் அதை யோசித்து சற்று தயக்கம் காட்டி வருகிறது. அதே சமயம் சமீபத்தில் டில்லி சென்ற அதிமுக நிர்வாகிகள், அண்ணாமலை பற்றிய கூறி புகார்களும் இருப்பதால் அதிமுக உடன் கூட்டணி அமைய வேண்டும் என்றால் அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்கினால் தான் சரியாக வரும் என்றும் பாஜக தலைமை நினைக்கிறது. இதனால் சாதக, பாதகங்களை யோசித்து தான் தயக்கம் காட்டி வருகிறதாம்.
களத்தில் குதித்த திமுக :
மற்றொரு புறம் முக்குலத்தோர் ஓட்டுக்காக தான் சசிகலா, தினகரன், ஓபிஎஸ் ஆகியோரையும் கழட்டி விடாமல் இன்னும் தங்களுடன் வைத்துக் கொண்டுள்ளது பாஜக. கூட்டணி பேச்சுவார்த்தை பிரதானமாக இருந்தாலும், முக்குலத்தோர் ஓட்டுக்களை பெறுவது தான் அதிமுக, பாஜக.,வின் நோக்கமாக உள்ளது. எந்த மாதிரி பேசி, கூட்டணியை முடிவு செய்தால் முக்குலத்தோர் ஓட்டுக்களை பெறலாம் என பாஜக, அதிமுக ரகசிய திட்டம் தீட்டி வருகின்றன. சீமான், விஜய் போன்றவர்களும் ஒரு புறம் தங்கள் பங்கிற்கு முயற்சி செய்து வருகிறார்கள். இப்படியே விட்டால் நம்ம நிலை மோசமாகி விடும் என நினைத்தோ என்னவோ, அமைய போகும் பாஜக-அதிமுக கூட்டணிக்கு கிடைக்கும்க முக்குலத்தோர் ஓட்டுக்களை தடுக்க சர்பிரைஸ் அறிவிப்பு ஒன்றை திமுக வெளியிட்டுள்ளது.
திமுக.,வின் சர்ப்ரைஸ் அறிவிப்பு :
அதாவது, முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த முக்கியமான மற்றும் பிரபலமானவராக இருந்த மக்கள் தலைவர் பி.கே.மூக்கையாவுக்கு மணிமண்டபம் அமைக்க உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளி வந்த உடனேயே முதல் ஆளாக சென்று முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார், முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ். திமுக கூட்டணியில் தற்போது முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்ததாக இருக்கும் ஒரே கட்சி கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை தான். அதனால் கருணாசை வைத்தே காய் நகர்த்த திமுக திட்டமிட்டுள்ளதாம். இவரை வைத்தே முக்குலத்தோர் வாக்குகளை பெற வேண்டும் அல்லது அதிமுக-பாஜக கூட்டணிக்கு முக்குலத்தோர் வாக்குகள் போக விடாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக தான் முக்குலத்தோரின் ஆதரவை பெற பல அறிவிப்புக்களை திமுக அறிவித்து வருகிறதாம். இன்னும் கருணாசை வைத்து பல வேலைகளை செய்ய திமுக திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
என்ன செய்ய போகிறது பாஜக ?
திமுக.,வின் இந்த அறிவிப்பை சற்று எதிர்பார்க்காத அல்லது கணிக்காத பாஜக-அதிமுக சற்று திகைத்து போய் உள்ளன. திமுக.,வின் இந்த முயற்சிகளை முறியடிக்க கண்டிப்பாக ஏதாவது ஒரு அதிரடியை பாஜக செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை சட்டசபை தேர்தலில் சமுதாய ஓட்டுக்கள், குறிப்பாக தென் மாவட்ட சமுதாய ஓட்டுக்களை பெற அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டும் என சொல்லப்படுகிறது. இதனால் இனி வரும் நாட்களில் தமிழக அரசியல் களம் எதிர்பார்ப்பதை விட விறுவிறுப்படையும் என சொல்லப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்