தமிழ்நாடு

விடுமுறை தினத்தை ஒட்டி தொட்டபெட்டாவில் குவியும் சுற்றுலா பயணிகள்...

கோடை காலம் துவங்கியதும், குளிர் பிரதேசமான உதகையின் தொட்டபெட்டாவில்சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

Malaimurasu Seithigal TV

மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலா தளம் ஆகும். இங்கு அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க நாள்தோறும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருகை புரிகின்றனர்.

இதில் உதகையில் அமைந்துள்ள மிகச்சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்றான தென்னிந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த சிகரமான தொட்டபெட்டா மலை சிகரத்தில் அமைந்துள்ள காட்சி முனையை கண்டு ரசிக்க தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று அதிகாலை முதல் குவிந்தனர்.

மேலும் தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் அமைந்துள்ள தொலைநோக்கி டெலஸ்கோப் கருவி மூலம் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள வானுயர்ந்த மலைகளையும், பச்சை பசேல் என காட்சி அளிக்கும் வனப்பகுதிகளையும், மாநில எல்லைப் பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் எல்லை பகுதிகளையும் கண்டு ரசித்தும் செல்பி புகைப்படங்கள் எடுத்தும், உதகையில் நிலவும் குளு குளு காலநிலையை அனுபவித்து விடுமுறை நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், சமவெளி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் ஞாயிறு விடுமுறை தினத்தை ஒட்டி உதகையில் அமைந்துள்ள சுற்றுலா தளங்களை கண்டு ரசிக்க வருகை புரிந்ததாகவும் உதகையில் நிலவும் குளு குளு கால நிலையில் உதகை தொட்டபெட்டா மலை சிகரத்தில் அமைந்துள்ள காட்சி முனைகளை கண்டு ரசித்தது மகிழ்ச்சி அளிப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.