தமிழ்நாடு

கொசுவர்த்தியால் நேர்ந்த சோகம்! குழந்தை உட்பட 3 பேர் தீயில் பலி

உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பார்த்திபன், அவரது மனைவி சித்ரா, குழந்தை ஜெயஸ்ரீ ஆகியோரின் உடல்கள்...

மாலை முரசு செய்தி குழு

கூடுவாஞ்சேரி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தீயில் கருகி உயிரிழந்த சோகம் பெர்ம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . கொசுவத்தியால் ஏற்பட்ட தீ விபத்தால் உடல் கருகி உயிர் இழந்ததாக போலீசார் தகவல்.

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த பாண்டூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (36).  இவர் கட்டுமான வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சித்ரா (25) என்கிற மனைவியும், ஜெயஸ்ரீ (2) என்கிற குழந்தையும் இருந்துள்ளனர். பார்த்திபனின் சகோதரி மகேஸ்வரியின் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் நேற்றிரவு அவரை பார்ப்பதற்கு தனது குடும்பத்துடன் பார்த்திபன் கன்னிவாக்கத்தில்  உள்ள சகோதரியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு மகேஸ்வரியின் குழந்தைக்கு காய்ச்சல் அதிகரித்ததால் , பார்த்திபனின் சகோதரி மற்றும் அவரது கணவர் ராம்நாத் ஆகியோர் குழந்தையை அழைத்துக் கொண்டு நள்ளிரவில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனால் பார்த்திபனை வீட்டிற்கு அனுப்பாமல் இங்கேயே தங்குமாறு கேட்டு கொண்டுள்ளனர்.இதையடுத்து பார்த்திபன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தனது அக்கா வீட்டிலேயே இரவு தங்கியுள்ளார். தொடர்ந்து மகேஸ்வரி தனது குழந்தைக்கு சிகிச்சை முடிந்த பின்னர் இன்று அதிகாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு முழுவதும் புகை சூழ்ந்து தீ பற்றி எரிந்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தொடர்ந்து உள்ளே சென்று அணைக்க முயன்ற போது கடுமையான புகை மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் உடனடியாக வெளியே வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர் மறைமலைநகர் தீயணைப்புத் துறையினர் மற்றும் கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பார்த்திபன், அவரது மனைவி சித்ரா, குழந்தை ஜெயஸ்ரீ ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கூடுவாஞ்சேரி போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டில் வைக்கப்பட்ட துணிகளின் அருகே கொசுவத்தி ஏற்றி வைத்துவிட்டு தூங்கியதால் வீடு முழுவதும் தீ பரவி தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளிவந்துள்ளது. தொடர்ந்து அக்கம்பக்கத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.‌ இந்த சம்பவம் கன்னிவாக்கம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.