மதுரை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "எனக்கும் அ.தி.மு.க.வினர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரூ.15 கோடி வாங்கிக் கொள்ளுங்கள் என்றும், நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின்போது அந்த தொகையைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறினர். இதுதொடர்பாக கட்சித் தலைமையிடம் உடனடியாக நான் புகார் அளித்துள்ளேன். ரூ.100 கோடி கொடுத்தாலும் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறமாட்டார்கள்." எனப் பேசினார்.
இந்த பேட்டிக்கு பதிலளிக்கும் வகையில் தனது சமூக வலைத்தளத்தில் காட்டமான பதிவை வெளியிட்டுள்ளார் டிடிவி தினகரன்.
இதுகுறித்த அவரது பதிவில், "தவெக அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினரும் முன்வைத்துள்ள குதிரை பேர குற்றச்சாட்டு, அலங்கோல ஆட்சியின் அவலங்களை மறைத்து மக்களை திசைதிருப்பும் செயல் – “கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் வீழ்ச்சி” என்பது போல தவெகவின் தற்குறித் தனமான நிர்வாகமே அதன் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
தமிழக அரசியலில் முதன்முறையாகக் குதிரை பேரத்தை அறிமுகப்படுத்தி, மைனாரிட்டி ஆட்சியை நடத்தி வரும் தவெக, தற்போது குதிரை பேரம் குறித்துப் பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவதற்கு இணையானது.
தங்களது திறனற்ற நிர்வாகத்தால் பொதுமக்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வேலைவாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதைத் திசைதிருப்புவதற்காகவே இந்த குதிரைபேர நாடகத்தை பார்க்க வேண்டியுள்ளது.
ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை பலம் இல்லாத தவெக, ‘யானை வரும் பின்னே; மணி ஓசை வரும் முன்னே’ என்பது போல, தவெக தலைவர் வருவார் பின்னே, சோபா வரும் முன்னே என ஒவ்வொரு கட்சியின் தலைமை அலுவலகத்திற்கும் சோபாவை அனுப்பி ஆதரவு கோரியதோடு, தவெகவுக்கு எதிராகப் போட்டியிட்டு மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற மாற்றுக் கட்சி எம்.எல்.ஏ.க்களை தட்டித்தூக்கி ராஜினாமா செய்யவைத்து, அதன் மூலம் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டு, தற்போது குதிரை பேரம் குறித்து ஒப்பாரி வைப்பது முரண்பாட்டின் உச்சகட்டமாகும்.
அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு; மின்சாரக் கட்டணக் குளறுபடிகள்; அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்; அரசின் அனைத்துத் துறைகளையும் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள்; அரசு நிர்வாகங்களில் ஆளுங்கட்சியினரின் தலையீடு; எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி அமைச்சர்கள் வரை அரசுப் பணிகளை ஒதுக்குவதற்காக லஞ்சம் கேட்பதாக எழும் புகார்கள்; பொருளாதார வீழ்ச்சி; அண்டை மாநிலங்களை நோக்கிச் செல்லும் தொழில் முதலீடுகள் எனத் தவெக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகளால் ஒட்டுமொத்த தமிழகமும் இதுவரை இல்லாத அளவிற்கு பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
மேலும், நாள்தோறும் அதிகரித்து வரும் தொடர் படுகொலைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குழந்தைகள் மாயமாகும் சம்பவங்கள், சிறைக் கைதிகள் தப்பியோடும் நிகழ்வுகள், போதைப்பொருட்களைப் பதுக்கி வைக்கும் ஆளுங்கட்சியினர் என சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கையும், நிர்வாகத் தோல்விகளையும் திசைதிருப்பி மக்களை ஏமாற்றும் நோக்கில், ஆட்சிக்கு எதிராகக் குதிரை பேரம் நடப்பதாகக் கூறி நீலிக்கண்ணீர் வடிக்க வெட்கமாக இல்லையா?
அடுத்தடுத்து வரவுள்ள இடைத்தேர்தல்களை நேர்மையாகச் சந்திக்கத் திராணியற்று, இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளுக்கு மட்டும் இப்போதே சென்று, நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் "ஊரான் வீட்டு நெய்யில் உங்கள் வீட்டிற்குச் ஸ்வீட் செய்வதும்", அப்பகுதிகளில் உள்ள கல்லூரிகளை மிரட்டி மாணவர்களை அழைத்து வந்து Road Show நடத்துவதும், கேவலத்திலும் கேவலமான அரசியலாகும்.
எனவே, தனது திறனற்ற நிர்வாகத்தை மறைக்கவும், மக்களைத் திசைதிருப்பவும் மேற்கொள்ளும் அற்பத்தனமான இதுபோன்ற முயற்சிகளைக் கைவிட்டு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்யாவிட்டால் மக்களே வெகுண்டெழுந்து இந்த மைனாரிட்டி தவெக அரசுக்கு ஜனநாயக ரீதியில் முடிவுரை எழுதுவார்கள்." எனப் பதிவிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.