த.வெ.க. தலைமையில் கூட்டணியை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பான முதல் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூலை 1-ந்தேதி சென்னை கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். த.வெ.க.வுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வருவதால், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் அந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
2-ம் கட்ட ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில், த.வெ.க. ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகளின் 2-ம் கட்ட ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு த.வெ.க. மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களுமான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் ஆகியோர் நேரில் சென்று அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் மூத்த நிர்வாகிகள் இன்று நடக்கு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும், ஆனால் வெளியில் ஆதரவு தொடரும் என்றும் தங்களது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார்.
கூட்டணிக்கு பெயர்.. நிர்வாகிகள் நியமனம்?
இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க. மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில்அமைய உள்ள கூட்டணிக்கு பெயர் சூட்டுவது குறித்து முடிவு செய்யப்பட உள்ளதாகவும், கூட்டணியின் தலைவராக முதல்-அமைச்சர் விஜய் தேர்வு செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கூட்டணியின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை உருவாக்கி, அவற்றுக்கு நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இன்றைய 2-ம் கட்ட ஆலோசனை கூட்டம் த.வெ.க. தலைமையிலான கூட்டணியின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.