tvk budget 2026 changes comparison with dmk 2025 budget 
தமிழ்நாடு

TVK Budget: கல்விக்கு நிதிக்குறைப்பு, விளையாடுக்கு அதிகம் - பட்ஜெட்டில் வந்த மாற்றம் என்ன?

'வெற்றித் திறன் பயிற்சித் திட்டம்', 'வெற்றி தொழில்முனைவோர் திட்டம்', 'வெற்றி வீடு திட்டம்', 'வெற்றி 150 திட்டம்' என ஏற்கெனவே அமலில் இருக்கும் திட்டங்கள், 'வெற்றி' திட்டங்களாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

மாலை முரசு செய்தி குழு

தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. 'அண்ணனின் சீர்', 'போதையில்லா தமிழகம்', 'TNSHIC' நிறுவனம் அமைத்தல் உள்ளிட்ட சில திட்டங்கள் கவனம் பெற்றுள்ளன. எனினும், எதிர்க்கட்சிகள் இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளன.

பெரும்பாலான அறிவிப்புகள் முந்தைய அரசின் திட்டங்களை பெயர் மாற்றம் செய்து அறிவித்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

உதாரணமாக, மடிக்கணினி வழங்கும் திட்டம் 'வெற்றி மடிக்கணினி திட்டம்' என மாற்றப்பட்டுள்ளது. இதேபோல், 'வெற்றித் திறன் பயிற்சித் திட்டம்', 'வெற்றி தொழில்முனைவோர் திட்டம்', 'வெற்றி வீடு திட்டம்', 'வெற்றி 150 திட்டம்' என ஏற்கெனவே அமலில் இருக்கும் திட்டங்கள், 'வெற்றி' திட்டங்களாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

பள்ளிக் கல்வித்துறைக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. 2025–26 பட்ஜெட்டில் ரூ.46,767 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு ரூ.44,527 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் திமுக அரசு அறிவித்த இடைக்கால பட்ஜெட்டில் ரூ.48,534 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உயர்கல்வித்துறைக்கு கடந்த பட்ஜெட்டை விட ரூ.101 கோடி குறைவாக, ரூ.8,393 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Finance Minister

எரிசக்தித்துறைக்கு கடந்த பட்ஜெட்டை விட ரூ.5,350 கோடி குறைவாக, ரூ.15,828 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நீர்வளத்துறைக்கு ரூ.9,264 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார். இது கடந்த பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில் ரூ.196 கோடி குறைவாகும்.

அதே சமயம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு ரூ.1,051 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன் குறிப்பிட்டார். இது கடந்த முழு பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில் ரூ.479 கோடி அதிகமாகும்.

இதேபோல், மருத்துவத்துறைக்கு கடந்த பட்ஜெட்டை விட சுமார் ரூ.1,400 கோடி அதிகமாக, ரூ.23,357 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2026–27 நிதியாண்டில் ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.39,609 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில் சுமார் ரூ.10,000 கோடி அதிகமாகும்.

இதேபோல், உணவு மற்றும் கூட்டுறவுத்துறைக்கு கடந்த பட்ஜெட்டை விட ரூ.5,790 கோடி அதிகரித்து, ரூ.22,858 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Budget 2026-27

சமூக நலத்துறையைப் பொறுத்தவரை, ரூ.9,818 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன் குறிப்பிட்டார். இது கடந்த பட்ஜெட்டை விட ரூ.1,211 கோடி அதிகமாகும்.

நெடுஞ்சாலைத்துறைக்கு கடந்த பட்ஜெட்டை விட ரூ.382 கோடி கூடுதலாக, ரூ.21,524 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி, 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசம், மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துதல் போன்ற தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றம் அளித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.