தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர் மரிய வில்சன், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
அதன்படி, மாநிலம் முழுவதும் சுமார் 5.32 லட்சம் ‘ஜென் Z’ மாணவர்களுக்கு ரூ.277 கோடி மதிப்பில் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளதாக மரிய வில்சன் தெரிவித்துள்ளார். மாணவர்களின் அன்றாட பயன்பாட்டை கருத்தில் கொண்டு சைக்கிளுடன் ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டிலும் வழங்கப்பட உள்ளது. குறிப்பாக, மாணவர்கள் பாதுகாப்பாக பள்ளிக்குச் சென்று வருவதை உறுதி செய்யும் வகையில் ஹெல்மெட் வழங்கப்படுவது இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் போக்குவரத்து சிரமத்தை குறைப்பதுடன், பள்ளி செல்லும் மாணவர்களுக்கு பாதுகாப்பான பயண வசதியை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், ரூ.277 கோடி நிதி ஒதுக்கீட்டில் 5.32 லட்சம் மாணவர்களை உள்ளடக்கியுள்ளதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.