தமிழ்நாடு

BREAKING: “தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் அதிரடி கைது” - ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை!

மதுபோதையில் ஆட்சியரின் வீட்டுக்குச் சென்று தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

Mahalakshmi Somasundaram

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில், தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அவரது கணவரிடம் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில், தற்போது எம்எல்ஏ கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு, கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகப் புகார் எழுந்தது. மேலும், மதுபோதையில் ஆட்சியரின் வீட்டுக்குச் சென்று தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த அருள் விக்னேஷ், அவை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என விளக்கம் அளித்திருந்தார். இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து, கடந்த நவம்பர் 23-ம் தேதி மாவட்ட ஆட்சியர் பத்மஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷஹ்னாஸிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையைத் தீவிரப்படுத்தும் வகையில், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாகவும், நிர்வாகப் பிரிவு ஐஜி காமினி விசாரணையைக் கண்காணிக்கவும் நியமிக்கப்பட்டனர். விசாரணையில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது என்றும், உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் கணவர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா மற்றும் அவரது கணவரும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியருமான அப்துல் ரகுமானிடம் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது.

நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் முன்னிலையில் இந்த விசாரணைகள் நடைபெற்றன. சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற விசாரணையில், புகாரின் தன்மை, குறுஞ்செய்திகள் தொடர்பான ஆதாரங்கள், சம்பவத்தின் பின்னணி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விசாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் விரிவான அறிக்கையைத் தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்தச் சூழலில், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், தற்போது அவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால், கள்ளக்குறிச்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை முன்னேற்றம் குறித்து நவம்பர் 27-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும், இறுதி விசாரணை அறிக்கையை டிசம்பர் 22-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் ஆபாசப் பதிவுகள் மற்றும் குறுஞ்செய்திகள் பரவினால் அவற்றை நீக்க சைபர் குற்றப்பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் நடத்தப்படும் விசாரணையில் மேலும் என்னென்ன தகவல்கள் வெளியாகும், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் காவல் துறையினரால் கைது செய்யப்படுவது இதுவே முதன்முறை என சொல்லப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.