தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் ஊழல் இல்லாத ஆட்சியை தருவேன் என்று கூறி வரும் நிலையில், செங்கல்பட்டு மாம்பாக்கம் தவெக ஊராட்சி மன்ற தலைவரும், தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா என்பவர் ஒப்பந்ததாரரிடம் 1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சியில் ஒப்பந்ததாரர் நவீன் (24) என்பவர் சிமெண்ட் சாலை அமைப்பாதற்காக ரூபாய் 9.80 லட்சம் மதிப்பீட்டில் ஒப்பந்தம் போட்டு சாலை பணிகளையும் முடித்துள்ளார். சாலை பணிகள் முடிவுற்ற நிலையில் ஒப்பந்ததாரரின் Bill பாஸ் செய்யாமல் நிலுவையில் இருந்துள்ளது. இந்த நிலையில் தவெக ஊராட்சி மன்ற தலைவரும், மாவட்ட இணை செயலாளருமான வீரா (எ) வீராசமியை நாடியுள்ளார் ஒப்பந்ததாரர் நவீன்.
அப்பொழுது உன்னிடம் பேச வேண்டும் என்று கூறி அவரது கட்சி அலுவலகத்திற்கு அழைத்துள்ளார். கடந்த 8ம் தேதி அங்கு சென்ற நவீனிடம் “ஒரு லட்சம் கொடு நான் பில் பாஸ் செய்கிறேன்” என்று லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு நவீன் “உங்களுக்கு ஒரு லட்சம் கொடுத்துவிட்டால் ஒப்பந்தம் எடுத்து வேலை செய்ததில் நஷ்டம் ஏற்படும்” என்று கூறி 50,000 வேண்டுமென்றால் தருகிறேன் என்று கேட்டுள்ளார். பின்னர் பைனலாக 75,000 பேரம் பேசி முடிந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் மறுநாள் தவெக ஊராட்சி மன்ற தலைவர் வீரா என்பவரின் G-pay விற்கு ரூபாய் 50,000 அனுப்பியுள்ளார் நவீன். அதை தொடர்ந்து மீதம் கொடுக்க வேண்டிய 50,000 லஞ்ச பணத்தை கொடுக்க 10ம் தேதி நவீன் சென்றபோது ஒரு லட்சம் போதாது 2,00,000 கொடு என்று அடாவடி செய்து 2 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார் தவெக மாவட்ட இணை செயலாளரும், மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவருமான வீரா. ஒப்பந்ததாரர் நவீன் “இரண்டு லட்சம் உங்களுக்கு கொடுத்தால் எனக்கு இதில் ஒன்றுமே கிடைக்காது” என்று கூறி கெஞ்சியதும் 1,50,000 கொடு என்று கேட்டுள்ளார். பின்னர் இறுதியாக ஒரு லட்சத்து முப்பதாயிரம் (1,30,000) கொடுத்துவிடு என்று கூறியுள்ளார் தவெக ஊராட்சி மன்ற தலைவர்.
கேட்ட பணத்தை கொடுக்க ஒப்பந்ததாரர் ஒப்புக்கொண்டதும் உடனே ஊராட்சி மன்ற கிளர்க்கிடம் செல்போனில் தொடர்பு கொண்டு உடனே நவீன் பில்லை பாஸ் செய்து கொடுங்கள் என்று கூறியுள்ளார் வீரா. அதனை தொடர்ந்து 11ம் தேதி தவெக ஊராட்சி மன்ற தலைவர் வீராவின் G-pay வில் ரூபாய் 50,000 அனுப்பியுள்ளார். மீதம் கொடுக்க வேண்டிய 30,000 லஞ்சம் பணத்தை நேரில் சென்று ஒப்பந்ததாரர் நவீன் தவெக ஊரட்சி மன்ற தலைவரின் அலுவலகத்தில் கொடுத்த வீடியோ காட்சி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாய் பரவி வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் என்னுடைய ஆட்சியில் ஒரு பைசா கூட ஊழல் செய்யமாட்டேன் யாரையும் ஊழல் செய்யவும் விடமாட்டேன் என்று கூறி வரும் நிலையில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளரும், மாம்பாக்கம் தவெக ஊராட்சி மன்ற தலைவருமான என். வீரா (எ) வீராசாமி 9.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எடுக்கப்பட்ட ஒப்பந்ததில் அவருக்கு லஞ்சமாக ரூபாய் 1.30 லட்சம் கொடுக்க வேண்டும் என அடாவடியாக கேட்டு லஞ்சம் வாங்கிய வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரூபாய் 1.30 லட்சம் பணத்தை தவெக ஊராட்சி மன்ற தலைவர் லஞ்சமாக வாங்கியும் இன்னும் பில் பாஸ் ஆகாத நிலையே தற்பொழுது நீடிப்பதாக ஒப்பந்ததாரர் நவீன் தெரிவித்துள்ளார்.
ஒப்பந்ததாரரிடம் ரூபாய் 1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி மன்ற தலைவர் வீரா என்கின்ற வீராசாமி கடந்த 2023 செப்டம்பர் மாதம் முறைகேடு செய்ததாக 1, 2, 5 ஆகிய வார்டு உறுப்பினார்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்திய பின்பு அவருடைய செக் பவர் கேன்சல் செய்கின்றனர். அதை தொடர்ந்து 2025ம் ஆண்டு மே மாதம் 6 வார்டு உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு தலைவர் பதவி பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து வீரா சென்னை நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்து கடந்த 20 நாட்களுக்கு முன்பு மீண்டும் தலைவர் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்