TVK Vijay Admin
தமிழ்நாடு

விஜய்க்கு அரசியல் மெச்சூரிட்டி இல்லையா? அடுத்தடுத்து சர்ச்சையாகும் அரசியல் பேச்சுக்கள்...

விஜய்யும் அரசியல் பேசி, எதிர்க்கட்சிகளை தாக்கி விமர்சித்து வருவது பலருக்கும் சளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Anbarasan

விஜய்யின் முதல் அரசியல் மாநாட்டு பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தாலும், சமீப காலமாக அவர் பேசும் பல விஷயங்கள் சர்ச்சைக்கும், விவாதத்திற்கும் உள்ளாகி வருகின்றன. இது விஜய்க்கு மெச்சூரிட்டி இல்லையோ என்ற எண்ணத்தை பலரின் மனதிலும் ஏற்படுத்த துவங்கி உள்ளது.

விஜய், அரசியல் கட்சி துவங்கி, தன்னுடைய கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடித்தி முடித்தார். இதில் அரசியல் கட்சிகள் முதல், நாட்டு நிலவரங்கள், மக்கள் பிரச்சனைகள், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் பற்றிய வழக்கமான விமர்சனங்கள் என பலவற்றிற்கும் தெளிவாக, பதிலளிக்கும் வகையில் தன்னுடைய உரையை அமைத்திருந்தார். இது தமிழக மக்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்களாலும் கவனிக்கும் விதமாக இருந்தது. இதனால் தமிழக அரசியலில் விஜய்யின் வருகை நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என அனைவரும் நம்ப துவங்கினர். ஆனால் சமீப காலமாக விஜய்யின் பேச்சுக்கள் சர்ச்சையாக்கப்பட்டு வருகின்றன.

சர்ச்சையாகும் விஜய் பேச்சுக்கள் :

குறிப்பாக சமீபத்தில் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ஆண்டு விழாவில் மும்மொழி கொள்கை குறித்து பேசிய விஜய், " இப்போ சமீபமாக புதிய பிரச்சனை ஒன்று கிளம்பி உள்ளது" என்றார். ஆனால் தமிழகத்தில் மூன்றாவது மொழிக்கும் எதிரான முழக்கம் இன்று, நேற்றல்ல பல காலமாக நடந்து வருகிறது. இன்னும் சொல்லப் போனால் மூதறிஞர் ராஜாஜி காலத்தில் இருந்தே, மும்மொழி கொள்கையை தமிழகம் ஏற்க மறுத்து, எதிர்த்து வருகிறது. அதிலும் இந்தி திணிப்பிற்கு எதிராக பல போராட்டங்கள் பல காலகட்டங்களில் நடந்துள்ளது. தமிழக அரசியல், தமிழக வரலாறு தெரிந்து அனைவருக்கும் இது நன்றாகவே தெரியும். ஆனால் மும்மொழி கொள்கை என்பது என்னவோ இப்போது உருவான பிரச்சனை என்பது போல் விஜய் பேசியது சர்ச்சையாகி உள்ளது.

விஜய்க்கு அனுபவம் போதாதா?

"விஜய் கத்துக்குட்டி தனமாக பேசி வருகிறார். அவருக்கு அரசியல் மெச்சூரிட்டி கிடையாது" என பலரும் விமர்சித்து வருகின்றனர். அதே போல் வழக்கமான அரசியல் கட்சி தலைவர்களை போலவே ஓட்டுக்காக, குறிப்பிட்ட சமூக மக்களின் ஆதரவை பெற வேண்டும் என்பதற்காக ரமலான் நோன்பில் கலந்து கொண்டு, அங்கும் சென்று அரசியல் பேசியது,"இவரை மற்ற அரசியல்வாதிகளை போல் தான் இருக்கிறார்" என்ற எண்ணத்தை பலரின் மனதிலும் ஏற்படுத்த துவங்கி உள்ளது. விஜய்யின் அரசியல் பாதை, பயணம் தனித்துவமாக உள்ளது என்ற இமேஜ் சமீப காலமாக உடைய துவங்கி உள்ளது என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது.

விஜய் இப்படி பேசி இருக்கக் கூடாது?

அம்பேத்காரின் நூல் வெளியீட்டு விழாவிற்கும் போய் அரசியல் பேசுவது என கிடைக்கும் இடங்களில் எல்லாம் விஜய்யும் அரசியல் பேசி, எதிர்க்கட்சிகளை தாக்கி விமர்சித்து வருவது பலருக்கும் சளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய அரசியல் பெரிய பிரச்சனையாக கிளம்பி உள்ள மும்மொழி கொள்கை பிரச்சனையை மிக சாதாரணமாக எடுத்துக் கொண்டு, ஒரே வரியில் விஜய் பேசி முடித்ததும் பலரிடமும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மொழி பற்றிய பிரச்சனையே தெரியாமல் இருக்கும் விஜய், நாளை ஒரு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, செய்தியாளர்கள் எழுப்பும் சரமாரியான கேள்விகளுக்கு பதிலளிப்பார்? ஒரு வேளை அவர் பதிலளக்க தடுமாறினாலும், தவறான புள்ளிவிபரத்துடன் பதிலளித்தாலும் அது அவரது அரசியல் எதிர்காலத்தை மட்டுமின்றி, தமிழக வெற்றி கழகத்தில் அரசியல் எதிர்காலத்தையும் சேர்த்தே பாதித்து விடும்.

அரசியல் விமர்சகர்களின் கருத்து :

அதனால் தமிழக அரசியல், தேசிய அரசியல், மக்கள் பிரச்சனை, தமிழக வரலாறு போன்றவற்றில் விஜய் இன்னும் தன்னுடைய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். பல விஷயங்களை அலசி ஆராய்ந்து அது பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டு, சமீபத்தில் நிகழ்வுகளின் பின்னணிகள் குறித்த விபரங்களை விரல் நுனியில் வைத்துக் கொண்டு ஆழமான கருத்துக்களுடன் விஜய் பேசினால் மட்டுமே அவர் ஒரு சிறந்த தலைவராக மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியும் என்பது அரசியல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. அதை விடுத்து, போகிற போக்கில் ஏதாவது கருத்து கூறுவது, அரசியல் தலைவர்கள் குறித்த விமர்சனங்களை முன் வைத்து பேசுவது மட்டும் அரசியல் தலைவராகி, மக்கள் மனதில் இடம்பிடித்து விட முடியாது என்பதே பலரின் கருத்தாகவே உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்