தமிழ்நாடு

போதை ஸ்டாம்புகள் விற்பனை.....கல்லூரி மாணவர்கள் இருவர் கைது....!!

சென்னையில் போதை ஸ்டாம்புகள் விற்பனை செய்ததாக கல்லூரி மாணவர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

Malaimurasu Seithigal TV

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வெளியே போதை பொருட்கள் விற்போரை கண்காணித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதனடிப்படையில் கடந்த 5 நாட்களாக தமிழக காவல்துறையினர் பள்ளி கல்லூரி பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் சென்னையில் டிரைவ் அக்கைன்ஸ்ட் டிரக்ஸ் ஆப்ரேஷனை மேற்கொண்டு தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அண்ணா நகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கொரட்டூரில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிதிரிந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இவரிடம் 2 போதை ஸ்டாம்புகள் மற்றும் 1 கிராம் மெத்தபெட்டமைன் போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. போதை ஸ்டாம்கள் மற்றும் மெத்த பெட்டமைன்யை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து அவரை விசாரித்தனர்.

அதில் அவர் மணப்பாக்கத்தை சேர்ந்த தனுஷ் என்பதும் கல்லூரி மாணவர் ஒருவரிடம் இருந்து போதை பொருட்கள் வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார். பிடிபட்ட நபர் அளித்த தகவலின்பேரில், விசாரணை செய்த போலீசார், கொரட்டூர் வெங்கடராமன் நகரை சேர்ந்த கல்லூரி மாணவரான டேனியல் ஜேக்கப் என்பவரை கைது செய்தனர்.

அவரை விசாரித்ததில் சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதை ஸ்டாம்புகள் விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்த 48 போதை ஸ்டாம்புகளை பறிமுதல் செய்த போலீசார், கைது செய்யப்பட்ட இருவரிடமும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.