தமிழ்நாடு

நகைக்கடையில் ரூ.5 லட்சம் பணத்தை திருடிய 2 காவலர்கள்: வழக்குப்பதிவு செய்யாமல் இடைநீக்கம் மட்டுமே செய்யப்பட்டதால் சர்ச்சை...

சென்னை பாரிமுனை அருகே நகைக்கடை ஒன்றில் 5 லட்சம் பணத்தை திருடிய காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படாமல் இடைநீக்கம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Malaimurasu Seithigal TV

கடந்த மே 26ம் தேதி ஊரடங்கின்போது, சென்னை பாரிமுனையில் உள்ள நகைக்கடை ஒன்று விதிகளை மீறி திறக்கப்பட்டுள்ளதாக பூக்கடை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில், ரோந்து காவலர்களான சஜின் மற்றும் முஜிப் ரஹ்மான் ஆகிய இருவரும்  சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கடையின் உரிமையாளர் பணத்தை எண்ணிக்கொண்டு இருந்ததாகவும், காவலர்கள் புறப்பட்டதும் 50 லட்சம் ரூபாயில் 5 லட்சம் ரூபாய் காணாமல் போனதாக கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக கடை உரிமையாளர் கடைக்கு வெளியே இருந்த சிசிடிவி காட்சி அடிப்படையில், உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபுவிடம் புகார் அளித்ததை தொடர்ந்து, போலீசார் பணத்தை எடுத்ததை ஒப்புக்கொண்டு பணத்தை நகைக்கடை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். 

இதுகுறித்து சென்னை வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் துரை குமாருக்கு தெரியவந்ததை தொடர்ந்து, காவலர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.  வேலூரில் கள்ளச்சாராய வியாபாரி வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிய காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்ட நிலையில், இந்த காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் பணியிடை நீக்கம் மட்டுமே செய்யப்பட்டு இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.