"விஷ்ணு ரெட்டி கட்டுப்பாட்டில் சுரங்கங்கள்! சபாநாயகருக்கு வந்த துண்டு சீட்டு..." - உதயநிதி ஸ்டாலின் நெத்தியடி கேள்விகள்! 
தமிழ்நாடு

"விஷ்ணு ரெட்டி கட்டுப்பாட்டில் சுரங்கங்கள்! சபாநாயகருக்கு வந்த துண்டு சீட்டு..." - உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

தமிழகத்தின் சுரங்கங்கள் அனைத்தும் விஜய்யின் நண்பர் விஷ்ணு ரெட்டியின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்களை வெளியிடப்போவதாகவும் உதயநிதி ஸ்டாலின் பேசினார் உதயநிதி ஸ்டாலின்.

மாலை முரசு செய்தி குழு

சட்டமன்றத்தில் முதலமைச்சர் உரைக்குப் பிறகு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதால், திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

செய்தியாளர்களிடம் வெளிநடப்புக்கான காரணம் குறித்து விளக்கம் அளித்த உதயநிதி ஸ்டாலின், திமுக மீது வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தார். அத்துடன், முதலமைச்சர் விஜய் மீது முக்கியமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

Vijay speech

குறிப்பாக, தமிழகத்தின் சுரங்கங்கள் அனைத்தும் விஜய்யின் நண்பர் விஷ்ணு ரெட்டியின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்களை வெளியிடப்போவதாகவும் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

"எங்களை குறை சொல்வதற்கு இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?" - உதய் பாய்ச்சல்

செய்தியாளர் சந்திப்பில் பேசிய உதயநிதி, "முதலமைச்சர் மீதே 15 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதை மறைத்ததாக வருமான வரி வழக்கு இருக்கிறது.

வருமானத்தை மறைத்ததற்கு வழக்கு போடும்போது, மிகவும் தாமதமாகப் போடப்படுகிறது என நீதிமன்றத்தில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டவர்தான் இந்த டம்மி முதலமைச்சர்.

இங்கிருக்கக்கூடிய பொதுப்பணித்துறை அமைச்சர் மீது அமலாக்கத்துறை வழக்கு இருக்கிறது.

அவர்கள் கட்சியில் புதிதாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள கோபிகிருஷ்ணன், விஜயபாஸ்கர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மீதும், முன்னாள் அமைச்சர்கள் மீதும் அமலாக்கத்துறை வழக்குகள் இருக்கின்றன. இவர்களையெல்லாம் கூடச் சேர்த்து வைத்துக்கொண்டு, எங்களை குறை சொல்வதற்கு இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

நேற்று ஐயுஎம்எல் சட்டமன்ற உறுப்பினர் ஒரு கூட்டத்தில் பேசும்போது என்ன பேசியிருக்கிறார் என்பதை நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். பெட்டி பெட்டியாகப் பணத்தை எடுத்துக்கொண்டு வந்து, ஆதரவு கேட்டதாக ஓப்பனாகச் சொல்லியிருக்கிறார்.

இப்படி ஓப்பனாகக் குதிரை பேரத்தில் இந்த அரசு நடந்துகொண்டிருக்கிறது.

எங்கள் மீது ஈடி வழக்கு போடலாம், நீதிமன்றத்தில் வழக்கு நடக்கலாம். அதைச் சட்டப்படி சந்திக்க நாங்கள் அனைவருமே தயார்.

நேற்று முன்தினம் எங்களை மிரட்டுவதற்காக லஞ்ச ஒழிப்புப் போலீஸை வைத்து, முன்னாள் அமைச்சர் வீட்டில் ரெய்டு போனார்கள். ரெய்டு போனவர்கள் ஐந்து, ஆறு மணி நேரத்தில் முடித்துவந்துவிட்டார்கள். அங்கே ஒன்றுமே இல்லை.

வெளியே வந்து அண்ணன் நேரு தெளிவாகப் பேட்டி கொடுத்துவிட்டார். இதையெல்லாம் சட்டப்படி சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்.

"3 ரெட்டிகள் கட்டுப்பாட்டில் தமிழக சுரங்கங்கள்!"

தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், "நான் இந்த அரசு மீது வெளிப்படையாக ஒரு குற்றச்சாட்டை வைக்கிறேன்.

முதலமைச்சருடைய நண்பர், அவருடைய அலுவலகத்தில் ஆலோசகராக இருக்கக்கூடியவர் விஷ்ணு ரெட்டி. சமீபத்தில் ஒரு அமைச்சர் கூட சட்டமன்றத்தில் பேசும்போது அவருக்கு நன்றி சொன்னார்.

விஷ்ணு ரெட்டியுடைய மச்சான் சுஜய் ரெட்டி, அவருடைய பிசினஸ் பார்ட்னர் அனில் ரெட்டி, இவர்கள் அனைவரும் சேர்ந்து அரசு நடத்தக்கூடிய சுரங்கங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். இதற்கான ஆதாரங்களை நான் ஒவ்வொன்றாக வெளியிடப்போகிறேன்" என்றார்.

ஜால்ரா அடிக்கிறார் சட்டமன்றத் தலைவர்!

மேலும் அவர், "நாங்கள் கேட்கின்ற கேள்வி எதற்குமே பதில் சொல்ல முடியாத ஒரு அரசு இங்கு அமைந்திருக்கிறது.

முதலமைச்சருடைய பதிலில் முழுக்க முழுக்க ஒரு சினிமா ஷூட்டிங்கிற்கு என்ன தேவையோ, மூணு நாளு மனப்பாடம் செய்து தயார் செய்துகொண்டு வந்து பேசியிருக்கிறார்.

அவையில் பொய்க் குற்றச்சாட்டுகளைச் சொல்லும்போது, எழுந்து நிராகரிக்க வேண்டியது எங்களுடைய உரிமை. அதனால், நாங்கள் எங்களுக்குப் பேச அனுமதி வேண்டினோம். முதலமைச்சர் பேசி முடித்த பிறகு கொடுப்பதாகச் சொன்னார் சபாநாயகர். அதுவரை நாங்கள் காத்திருந்தோம்.

ஆனால், அவர் பேசுவது எல்லாமே சினிமா ஷூட்டிங் போல இருந்தது. அவர் பேசிய எல்லாமே பஞ்ச் டயலாக்காக இருந்தது. அப்படிப் பேசும்போது எங்கள் உறுப்பினர்களின் கொந்தளிப்பைக் கட்டுப்படுத்த முடியாது. முதலமைச்சர் பேசி முடித்ததும், எதிர்க்கட்சித் தலைவராக எனக்கு வாய்ப்புத் தருவதாகச் சொன்னார் சபாநாயகர்.

ரெண்டு நிமிஷத்தில் அவருக்கு ஏதோ ஒரு சீட் வந்தது. அதைப் பார்த்துவிட்டு, வாய்ப்புத் தர முடியாது என மாற்றிவிட்டார்.

இந்தச் சபாநாயகர் ஒருதலைப்பட்சமாகப் பேசுகின்றார். முதலமைச்சர் பேசும்போது எங்கள் பக்கம் திரும்பவே இல்லை சபாநாயகர். ஒரு பக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். ஆளும் கட்சிக்கும், முதலமைச்சருக்கும் ஜால்ரா அடித்துக்கொண்டிருந்தார். அதைக் கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்" என்றார்.

"நாங்கள் பேசினால் இவரால் தாங்க முடியாது" - நெத்தியடி பதில் கொடுத்த உதய்

அவர்கள் வாயில் இருந்து பாஜகவில் 'ப' கூட வராது, அமித்ஷா என்றில்லை, அமித்ஷாவில் 'அ' கூட வராது. ஒரு அமைச்சர் பாஜக தலைவர்களைச் சாடிப் பேசியதை, இன்னொரு அமைச்சர் எழுந்து, அவைக்குறிப்பில் நீக்க வேண்டும் என்கிறார்கள். அந்த அளவுக்கு இந்த அரசு தைரியமற்ற, வக்கற்ற அரசாக டம்மி முதலமைச்சரால் நடத்தப்படுகிறது.

ஸ்கிரிப்ட் ரைட்டர்கள் எழுதிக் கொடுப்பதைப் படித்துவிட்டு, மனப்பாடம் செய்து, தயார் ஆகிவிட்டுப் பேசுகிறார்.

முதலமைச்சர் சொன்னது எல்லாமே குற்றச்சாட்டுகள்தான், எதுவுமே ஆதாரம் கிடையாது. இதே மாதிரி முதலமைச்சர் மீதும், பொதுப்பணித்துறை அமைச்சர் மீதும் கூட குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. ஆதாரம் என்பது நிரூபிக்க வேண்டியது.

பெண்கள் மீது ஆபாசமாகப் பேசக்கூடாது என்றெல்லாம் பேச இந்த முதலமைச்சருக்கு என்ன தகுதி இருக்கிறது? இவர் நடித்த படங்கள், நடித்த காட்சிகள், பாடிய பாட்டுகள், இதெல்லாம் பேசினால் அவரால் தாங்க முடியாது.

முதலமைச்சரின் நண்பர் விஷ்ணு ரெட்டி என்ன பொறுப்பில் இருக்கிறார்? சுஜய் ரெட்டி என்ன பொறுப்பில் இருக்கிறார்? அனில் ரெட்டி என்ன பொறுப்பில் இருக்கிறார்? ஏன் இப்போது வந்திருக்கக்கூடிய எல்லா சுரங்கம் சார்ந்த பொறுப்புகளையும் அவர்களிடம் ஒப்படைத்திருக்கிறீர்கள்? அதற்கான ஆதாரத்தை நாங்கள் வெளியிடுவோம்" என்றார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்