Udhayanidhi Stalin: எச்சரித்த எதிர்க்கட்சித் தலைவர் Udhayanidhi Stalin
தமிழ்நாடு

Udhayanidhi Stalin: "ஜோக்கர் கூட்டம், சட்டமன்றத்தில் சும்மா விடமாட்டோம்" - எச்சரித்த எதிர்க்கட்சித் தலைவர்

இப்போதைய முதலமைச்சர் பிரச்சனைகளை திசை திருப்ப நாம கொண்டுவந்த மெட்ரோ, சிப்காட் எல்லாம் ஆய்வு செய்துகொண்டிருக்கிறார். இது ஊரான் வீட்டு நெய்யில தன் குழந்தைக்கு ஸ்வீட் செஞ்ச மாதிரி இருக்கு... - உதயநிதி ஸ்டாலின்

malaimurasu.com

தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், விவசாய பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி, தவெக அரசைக் கண்டித்து திமுக சார்பில் தஞ்சாவூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சரை கடுமையாக சாடினார்.

முதலமைச்சருக்கு சுயநலம்தான் முக்கியம்

"இன்று ஆடிப்பெருக்கு காவிரி டெல்டாவில் ஆறுகள் வறண்டு பாலைவனம் போல காட்சியளிக்கிறன. இப்போது இருக்கக்கூடிய நிர்வாக திறனற்ற டம்மி முதலமைச்சரால் தான் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் தயவு வேண்டும் என்பதால் கர்நாடக காங்கிரஸை எதிர்த்து கேள்வி கேட்க முடியவில்லை. ஆட்சி அமைத்து 3 மாதம் ஆகியும் அவரது வாயிலிருந்து பாஜக என்ற வார்த்தை இதுவரை வந்தது இல்லை. அவ்வளவு பெரிய தைரியசாலி!

CM vijay

மேகதாது பிரச்சனையில் ஒன்றிய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்பதை கண்டிக்க தமிழக விவசாயிகள் டெல்லிக்கு சென்றிருக்கிறார்கள். அவர்களின் ரயிலை நாக்பூரில் வழிமறித்த மகாராஷ்டிரா காவல்துறை, தமிழ்நாட்டுக்குத் திருப்பி அனுப்பியுள்ளனர். இதைக் கண்டித்து எல்லா எதிர்க்கட்சியினரும் கேள்வி எழுப்பினோம். ஆனால் மகாராஷ்டிராவில் நடப்பது பாஜக ஆட்சி என்பதால் முதல்வர் வாய் திறக்கவில்லை.

முதலமைச்சருக்கு விவசாயிகளின் உரிமையை விட ஆட்சியைத் தக்க வைக்கும் சுயநலம் தான் முக்கியம்.

கர்நாடக முதலமைச்சரை பார்க்க போவதாக ஒரு டிராமா போட்டார். நம்முடைய தலைவர், எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல் கூட்டணிக் கட்சித் தலைவர்களே சந்திப்பது தேவையில்லை என்றார்கள். பின்னர் கர்நாடக முதலமைச்சரே நீங்கள் வர வேண்டாம், உங்களுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க முடியாது என்று சொன்ன பிறகுதான் அமைதியானார்.

மொத்த கேபினட்டும் ஜோக்கர் கூட்டம்

கர்நாடக முதலமைச்சரை சந்திப்பது இருக்கட்டும். நம் விவசாயிகளைச் சந்தித்து கோரிக்கைகளைக் கேடறிந்தாரா? அவரை சந்திக்க கோட்டைக்குச் சென்ற விவசாயிகளை காவல்துறையை வைத்து கைது செய்தார்.

முதலமைச்சர்தான் இப்படின்னா மீன்வளத்துறை அமைச்சர் ஒருவர் இருக்கிறார். அவர் பத்திரிக்கையாளர்களை பார்த்தாலே ஓடுகிறார். வேளாண் துறை அமைச்சர் பட்ஜெட்டை திருப்பதிக்கு கொண்டு சென்று பூஜை போடுகிறார். இதுதான் இன்றைக்கு அமைச்சர்களின் லட்சணம்.

TVK Ministers

திருட்டு லாட்டரி விற்கும் அமைச்சர், திருட்டு வீசிடி விற்பவர் ஒரு அமைச்சர், பிளாக்கில் டிக்கெட் விற்பவர் ஒரு அமைச்சர், உருட்டு கட்டையோடு சுற்றிக் கொண்டிருப்பவர் ஒரு அமைச்சர், போதை போடுபவர் ஒரு அமைச்சர். இப்படி மொத்த கேபினட்டும் ஒரு ஜோக்கர் கூட்டமாக அமைந்திருக்கிறது.

முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வரை, ஏன் அவர்களின் உறவினர்கள் கூட ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் எடுத்து வீடியோ வெளியீட்டு, ரீல்ஸ் வெறி முற்றிபோய் திரிகிறார்கள்! 

காவிரி ஒழுங்கக்காற்று குழுவின் உத்தரவை நிறைவேற்ற வேண்டுமென திமுக தலைவர் வழக்கு தொடுத்திருக்கிறார். அதற்கு ஒரு அமைச்சர், ஏன் கடந்த 5 ஆண்டுகளாக வழக்கு தொடுக்கவில்லை எனக் கேட்கிறார். இப்படி ஒரு அறிவாளி அமைச்சரை யாராவது பார்த்திருக்கிறீர்களா? கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் சரியாக வந்துகொண்டிருந்தது. இப்போது வரவில்லை, உங்களுக்கு வழக்கு தொடுக்க வக்கில்லை, எங்கள் தலைவர் சட்ட போராட்டத்தைத் தொடங்ககியிருக்கிறார்.

சும்மா விடமாட்டோம்

இப்போதைய முதலமைச்சர் பிரச்சனைகளை திசை திருப்ப நாம கொண்டுவந்த மெட்ரோ, சிப்காட் எல்லாம் ஆய்வு செய்துகொண்டிருக்கிறார். இது ஊரான் வீட்டு நெய்யில தன் குழந்தைக்கு ஸ்வீட் செஞ்ச மாதிரி இருக்குன்னு ஒரு மீம் பார்த்தேன். அவருக்கு அவரது பாஷையில் பேசினால்தான் புரியும்.

MK Stalin latest statement

தேர்தல் பிரசாரத்தில் பேசும்போது 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் எல்லோருக்கும் பயிர்க் கடன் தள்ளுபடி என்றார். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு 50 ஆயிரத்திற்கு குறைவாக கடன் வாங்கியவர்களுக்கு தள்ளுபடி என்றார். நாம் எதிர்ப்பு தெரிவித்த பிறகு 75 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக கடன் வாங்கியவர்களுக்கு தள்ளுபடி என்றனர். ஆனால் நடைமுறையில் 35 ஆயிரத்துக்கு அதிகமாக கடன் வாங்கியவர்களுக்கு தள்ளுபடி இல்லை எனக் கூறிவிட்டனர்.

நேற்று காவிரி பிரச்சனையில் தங்களது ஒற்றுமையை காட்ட கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி இருக்கிறார்கள். ஆனால் இங்குள்ள முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதை ஒரு அவமானமாக கருதுகிறார்.

தேர்தல் அறிக்கையில் சொன்னபடி பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். மேகதாதுவில் அணைக் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க, டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.

வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் சும்மா விடமாட்டோம். நிச்சயம் இந்த பிரச்சனையை எழுப்புவோம். டெல்டா விவசாயிகளுடன் என்றுமே திமுக உடன் நிற்கும்." எனப் பேசினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.