“எங்களுக்கு வந்தால் ரத்தம்; பாஜகவுக்கு வந்தால் தக்காளி சட்னியா?” – விஜயை சாடி உதயநிதி பேசியது என்ன? 
தமிழ்நாடு

“எங்களுக்கு வந்தால் ரத்தம்; பாஜகவுக்கு வந்தால் தக்காளி சட்னியா?” – விஜயை சாடி உதயநிதி பேசியது என்ன?

"பாஜக அடித்தாலும் வலித்தால் வெளியே சொல்லக்கூடாது அப்படிங்கிற ஆளுங்கட்சியுடைய இந்த பொலிட்டிக்கல் ஸ்ட்ராடஜியை இதுவரைக்கும் நாங்கள் யாரும் கேள்விப்பட்டதும் இல்லை, பார்த்ததும் இல்லை." - உதயநிதி

மாலை முரசு செய்தி குழு

தமிழக சட்டமன்றத்தில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தைத் தொடங்கிவைத்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், ஆளும் அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

“பிரச்சினைகளைச் சார்ந்த கேள்விக்கு, எந்தத் திசைதிருப்பலும், பழிபோடும் தந்திரமும் இல்லாமல், முதலமைச்சர் அவர்கள் உரிய பதிலை அளிப்பார் என்கிற நம்பிக்கையில் என்னுடைய பேச்சைத் தொடங்குகிறேன்.

ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை எழுப்புவதற்காக சட்டமன்றத்திற்கு எதிர்க்கட்சியாக எங்களை மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறார்கள்.

கொள்கை விளக்கக் குறிப்பில் 293-வது பக்கம், 295-வது பக்கம் மற்றும் 296-வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின்

குறிப்பாக, வழிப்பறி, திருட்டு ஆகிய குற்றங்கள் 2024-ம் ஆண்டை விட 2025-ம் ஆண்டில் குறைந்திருக்கிறது எனத் தரவுகளோடு அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கொலை, கொலை முயற்சி, கலவரம், பாலியல் குற்றங்கள் அனைத்தும் குறைந்திருக்கின்றன என அந்தப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

இனம் சார்ந்த சாதியப் பாகுபாடு போன்ற குற்றங்களும் குறைந்திருப்பதாக உங்களுடைய கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். எனவே, உங்களுடைய திராவிட மாடல் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு நன்றாக இருந்தது என்று காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் பெருமையாக ஒப்புக்கொண்டதற்கு எனது நன்றிகள்” என்றார்.

தொடர்ந்து அரசை விமர்சித்த அவர், "இந்த அரசு அமைந்து 116 நாட்கள் ஆகிறது. இத்தனை நாட்களில் இந்த அரசு புதிதாக கொண்டு வந்த திட்டங்களை விட பெயர் மாற்ற அறிவிப்புகள்தான் அதிகம் வருகிறது. இல்லையெனில், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை ரத்து செய்கிறீர்கள். பரந்தூர் விமான நிலையம், மாமல்லன் கால்வாய் என இதற்கு உதாரணமாக நிறைய விஷயங்களை குறிப்பிடலாம்.

விவசாயக்கடன் முழு தள்ளுபடி, ஆண்டுக்கு 6 சிலிண்டர், பெண்களுக்கு எல்லா பேருந்துகளிலும் இலவசம் என்றீர்கள். ஆனால், கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல் பாதிப் பாதியாக நிறைவேற்ற அறிவிப்பு மட்டுமே வெளியிட்டிருக்கிறீர்கள். இதைதயெல்லாம் பார்க்கையில் தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம் போல தாய்மாமன் காது குத்தும் திட்டம் என அறிவித்திருக்கலாம்." என்றார்.

அத்துடன், “முன்பு காவல் மரணங்களுக்கு எதிராகப் பேசிய தற்போதைய முதலமைச்சர் அவர்கள் என்ன சொன்னார்னா, ‘சாரி வேண்டாம், எங்களுக்கு நீதிதான் வேண்டும்’ அப்படின்னு பேசினார். ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த 116 நாட்களில் இதுவரைக்கும் எட்டு காவல் மற்றும் சிறை மரணங்கள் நடந்திருக்கின்றன. இதற்கெல்லாம் இதுவரைக்கும் நீதியும் கிடைக்கவில்லை. முதலமைச்சர் குறைந்தபட்சம் ஒரு சாரி கூட சொல்லவில்லை.

எம்ஜிஆர் நகர் வெங்கடேசன், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த திரு. கதிரேசன், தூத்துக்குடி அருணாச்சலம், மதுரையைச் சேர்ந்த பூசாரி பரமசிவம் ஆகியோர் காவல் நிலையங்களில் காவலர்களால் தாக்கப்பட்டு இன்றைக்கு உயிரிழந்திருக்கிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வேல்முருகன் என்ற மாரியப்பன், காவல்துறை தாக்கிய அவமானத்தில் தீக்குளித்து இறந்துபோயிட்டார். அதேபோல, காவல் நிலையத்தில் விசாரணை நடத்திய பிறகு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்ட கன்னியாகுமரி சபரிவர்மன், சேலையூர் பாலாஜி, மதுரை சிறையில் அன்வர்தீன் உள்ளிட்டோர் மரணம் அடைந்திருக்கிறார்கள்.

விஜய்

இந்தச் சம்பவங்களில் இதுவரைக்கும் இந்த அரசு, முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார் எனக் கேட்க விரும்புறோம். அதை இந்த அவையின் வாயிலாக நாம் தெரிந்துகொள்ள விரும்புறோம். ஒட்டுமொத்தமாக இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு மிக மிக மோசமான ஒரு நிலையை அடைந்திருக்கிறது. முதலமைச்சருடைய நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய உள்துறையும், உளவுத்துறையும் மொத்தமாகச் செயலிழந்துவிட்டதா என்ற சந்தேகம் எங்களுக்கு வந்திருக்கு.

குற்றச் சம்பவங்களைத் தடுக்க வேண்டிய காவல்துறையினர், அரசை விமர்சனம் செய்கிற எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுப்பதில்தான் ஆர்வமாக இருக்கின்றனர்.

குறிப்பாக, ஜென்சி இளைஞர்கள், அவர்களோடு கூட்டணி வைத்திருக்கக்கூடிய கூட்டணிக் கட்சியினர், பத்திரிகையாளர்கள் ஆகியோரை எல்லாம் கைது செய்வதில் மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறார்கள். ஆனால், முதலமைச்சரை ஓப்பனாக விமர்சனம் செய்கிற பாஜக தலைவர்கள் மீது இதுவரைக்கும் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

அவர் மீது ஏன் ஒரு கம்ப்ளைன்ட் கூட யாரும் இதுவரைக்கும் கொடுக்கவில்லை. எங்களுக்கு வந்தால் இரத்தம், அவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா என்று கேட்கிறோம்! இப்படி பாஜக அடித்தாலும் வலித்தால் வெளியே சொல்லக்கூடாது அப்படிங்கிற ஆளுங்கட்சியுடைய இந்த பொலிட்டிக்கல் ஸ்ட்ராடஜியை இதுவரைக்கும் நாங்கள் யாரும் கேள்விப்பட்டதும் இல்லை, பார்த்ததும் இல்லை." என்றார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்