தஞ்சாவூரில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை திரிஷாவை மறைமுகமாக குறிப்பிட்டு உதயநிதி இரட்டை அர்த்தத்தில் பேசியதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பாஜக தரப்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
காவிரி நீர் விவகாரம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை பெறுவதில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் திமுகவினர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் விமர்சித்தார்.
அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் நடிகை திரிஷாவின் பெயரை முழக்கமிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில் உதயநிதி சிரித்தபடி, "எங்கு தண்ணி வரவில்லை என்றாலும் அங்கு வரணும்" என்று கூறி பின்னர் தான் காவிரி தண்ணீரைப் பற்றித்தான் குறிப்பிட்டதாக உதயநிதி விளக்கம் அளித்தார். எனினும், உதயநிதியின் இந்தப் பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அவரது பேச்சு இரட்டை அர்த்தம் கொண்டதாக இருக்கிறது என்று கூறி பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிஞர் அண்ணா தனது தமிழ் புலமையால் கட்டியெழுப்பிய இயக்கத்தை, உதயநிதி தனது ஆபாச மொழியாலும் இரட்டை அர்த்தப் பேச்சுகளாலும் அழித்து வருவதாக விமர்சித்துள்ளார்.
மேலும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருப்பவர் பொது மேடையில் தரங்கெட்ட முறையில் பேசியிருப்பதாகவும், பெண்கள் குறித்த அவரது சிந்தனையை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பேச்சு அமைந்துள்ளதாகவும் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார். இதுபோன்ற பேச்சுகளை தமிழக பெண்களும், பெற்றோர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், வரும் தேர்தலில் தமிழக பெண்கள் இதற்கு தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கண்டித்து இன்று காலை 10 மணியளவில் அனைத்து மாவட்டங்களிலும் பெண் நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், உதயநிதியின் பேச்சு தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் முறையான புகார் அளிக்கவும் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலினின் பேச்சு தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேசிய மகளிர் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், காவிரி நீர் விவகாரத்தில் தொடங்கிய அரசியல் விவாதம் தற்போது உதயநிதியின் பேச்சை மையமாகக் கொண்டு புதிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக தரப்பில் இருந்து என்ன பதில் வெளியாகும் என்பதும், தவெக மற்றும் பாஜகவின் எதிர்ப்புக்கு உதயநிதி தரப்பு விளக்கம் அளிக்குமா என்பதும் அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.