தமிழ்நாடு

மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டால் அதற்கு பல்கலைக்கழகம் பொறுப்பல்ல!

ஆன்லைன் தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டால், அதற்கு பல்கலைக்கழகம் பொறுப்பல்ல என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, கடந்த ஓராண்டு காலமாக ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் பெரும்பாலான மாணவர்களின் முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டன. பிப்ரவரி - மார்ச் மாத செமஸ்டர் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதன் காரணமாக மீண்டும் மறு தேர்வு அறிவிக்கப்பட்டு, அந்த தேர்வும் ஆன்லைனிலேயே நடைபெற்று வருகிறது.

ஆன்லைன் தேர்வில் குறைபாடு உள்ளதால், மாணவர்கள் சிலர் தற்கொலை செய்துகொள்வதாகவும்,  அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்க வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தனியார் பொறியியல் கல்லூரி கூட்டமைப்பு மின்னஞ்சல் வாயிலாக கோரிக்கை விடுத்தது. மின்னஞ்சலில் வந்த கோரிக்கைக்கு பதிலளித்துள்ள அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன், கொரோனா பேரிடரைக் கருத்தில் கொண்டே ஆன்லைனில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும், ஆன்லைன் தேர்வு உட்பட எந்த ஒரு தேர்வையும் மாணவர்கள் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் என்றும், தேர்வில் தோல்வியடைந்து தற்கொலை செய்துகொள்வதற்கு பல்கலைக்கழகம் பொறுப்பல்ல என்றும் தெரிவித்துள்ளார். ஆன்லைன் தேர்வில் குறைபாடு இருப்பதாகக் கூறுவது தவறானது என்றும் பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் விளக்கமளித்துள்ளார்.