தமிழ்நாடு

சென்னை ஐஐடி-யில் புதிய ஆராய்ச்சி மையத்தை தொடங்கியது அமெரிக்க நிறுவனம்...!

Tamil Selvi Selvakumar

சென்னை ஐ.ஐ.டி -யில் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி பல்கலைக்கழகம் ஒன்று தனது புதிய மையத்தை தொடங்கி உள்ளது. 

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட சர்வதேச ஆராய்ச்சி பல்கலைக்கழகமான விர்ஜீனியா பாலிடெக்னிக் மற்றும் ஸ்டேட் யுனிவர்சிட்டி, சென்னை தரமணியில் உள்ள ஐ.ஐ.டி. மெட்ராஸ்  ஆராய்ச்சி பூங்காவில் தனது புதிய ஆராய்ச்சி மையத்தை தொடங்கி உள்ளது.  இதன் மூலம் சர்வதேச அளவிலான ஆராய்ச்சிகளை ஐ.ஐ.டி மற்றும் விர்ஜீனியா டெக் இணைந்து மேற்கொள்ள உள்ளது. 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விர்ஜீனியா டெக் தலைமைக் குழுவின் நிர்வாக துணைத்தலைவர் பேராசிரியர் சிரில் கிளார்க், விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகம் கல்வி மட்டுமின்றி, உயர்தர ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். சர்வதேச பல்கலைக்கழகமான இதற்கு தரமான கூட்டணியும், சரியான இடங்களும் வேண்டும் என்பதால் ஐ.ஐ.டி மெட்ராஸ் உடன் இணைந்துள்ளோம் என்று குறிப்பிட்டார். 

இதைத்தொடர்ந்து பேராசிரியர் விஸ்வநாத் வெங்கடேஷ் பேசிய போது, 150 வருட பாரம்பரியம் கொண்ட அமெரிக்காவின் விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகம், உலகின் 20 தலைசிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களில் இணைந்து ஒன்றாக இருக்கிறது என்று கூறிய அவர், ஆசியாவில் அதன் ஆராய்ச்சி மையத்தை ஐ.ஐ.டி. மெட்ராஸ் உடன் இணைந்து தொடங்கி உள்ளது என்றார். இதன் மூலம் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து பல்வேறு தளங்களில் உலகத்திற்கு தேவையான ஆராய்ச்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.