கோவை: வால்பாறை இஞ்சிபாறை கீழ் பிரிவு (லோயர் டிவிசன்) பகுதியில் முனியாண்டி மகன் தங்கம்(வயது 52), வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தானியார் தேயிலைத் தோட்டத்தில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இன்று இரவு சுமார் 8.55 மணி அளவில் இஞ்சிப்பாறை மேல் பிரிவு பகுதியில் உள்ள வீடுகளுக்கு பால் கொடுக்கச் சென்றுவிட்டு, அங்கிருந்து கீழ் பிரிவு பகுதியில் உள்ள வீடுகளுக்கு பால் கொடுக்க வந்து கொண்டிருந்தார்.
அப்போது, இஞ்சிபாறை தேயிலை தோட்ட தொழிலாளர் மருந்தகம் அருகில் கரடி ஒன்று தனது குட்டியுடன் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக அவரை அந்த கரடி தாக்கியது. இதில் தங்கம்-ன் இடது கையில் வெளி காயமும் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது.
அவரை மீட்ட அப்பகுதி மக்கள் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மானாம்பள்ளி வனச்சரக வனவர் திரு.மணிகண்டன் விரைந்து விசாரணை மேற்கொண்ட போது, அப்பகுதியில் கூண்டு வைத்து அங்கு உள்ள கரடியை பிடித்து அடர்ந்த வன பகுதியில் விடுமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.