சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள கிரானைட் தொழிலதிபர் வீரமணி வழக்கில் தற்போது விசாரணை புதிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் கிடைத்த ஆதாரங்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டதா அல்லது அழிக்கப்பட்டதா என்ற கோணத்தில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் அருண் உட்பட ஏழு காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் தற்போது விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளன. ஏற்கெனவே விசாரிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு மீண்டும் சம்மன் அனுப்பி விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
'ஜெம் கிரானைட்ஸ்' நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணையைச் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) மேற்கொண்டு வருகிறது. ஆரம்பத்தில் ஒரு புகாரின் அடிப்படையில் தொடங்கிய இந்த வழக்கு, தற்போது பல்வேறு புகார்கள், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வாக்குமூலங்கள் மற்றும் காவல்துறையின் முந்தைய விசாரணை நடவடிக்கைகள் எனப் பல கோணங்களில் விரிவடைந்துள்ளது.
இந்த வழக்கில் ஏற்கெனவே காவல்துறையினர் 720 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர். அதில் 40 சாட்சிகளின் வாக்குமூலங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆரம்பத்தில் இந்தப் புகாரை விசாரித்த காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடுகளும் தற்போது கேள்விக்குள்ளாகியுள்ளன. வீரமணி மீதான புகார் காவல்துறைக்கு வந்தபோது, சென்னை போலீஸ் கமிஷனராக ஏ. அருண் பணியாற்றி வந்தார். அவருக்குக் கீழ் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக ராதிகா இருந்தார். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக மத்திய குற்றப்பிரிவின் விபசாரத் தடுப்புப் பிரிவு உதவி கமிஷனர் யாஸ்மின் நியமிக்கப்பட்டிருந்தார்.
அந்த நேரத்தில் போதுமான ஆவணங்களும், வீரமணி குற்றத்தில் ஈடுபட்டார் என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்று கூறி விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், புகார் அளிக்கப்பட்டபோது கிடைத்த தகவல்கள் முறையாக விசாரிக்கப்பட்டனவா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான புகார் பெறப்பட்டு விசாரணை நடைபெற்ற காலகட்டத்தில் துணை கமிஷனர்களாக வனிதா மற்றும் கீதாஞ்சலி பணியாற்றினர். அவர்களின் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்களான ராஜலட்சுமி மற்றும் மகேஷ்குமார் செயல்பட்டனர். இதனால் முன்னாள் போலீஸ் கமிஷனர் அருண், ராதிகா, யாஸ்மின், வனிதா, கீதாஞ்சலி, ராஜலட்சுமி, மகேஷ்குமார் என மொத்தம் ஏழு அதிகாரிகளின் பெயர்கள் விசாரணையில் இடம்பெற்றுள்ளன.
இந்த அதிகாரிகள் மீது நான்கு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து தகவல் தெரிந்தும் புகார் அளிக்கத் தவறுவது, வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பது, பொய்யான சாட்சியங்களை உண்மையானவை எனக் காட்ட முயற்சிப்பது, குற்றம் தொடர்பான ஆதாரங்களை மறைப்பது அல்லது அழிப்பது போன்ற குற்றச்சாட்டுகள் இந்தப் பிரிவுகளில் அடங்கும்.
வீரமணி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்களை அழிக்க அருண் உத்தரவிட்டாரா? மற்ற அதிகாரிகள் அதன்படி செயல்பட்டார்களா? ஆரம்பகட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் ஏன் உரிய முறையில் கையாளப்படவில்லை? என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை காண சிறப்பு புலனாய்வுக் குழு முயற்சி செய்து வருகிறது. முன்னாள் போலீஸ் கமிஷனர் அருணிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், ஏழு அதிகாரிகளுக்கும் மீண்டும் சம்மன் அனுப்பி விசாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வீரமணி வழக்கில் ஆரம்பத்தில் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை முடிப்பு அறிக்கையை சிறப்பு போக்சோ நீதிமன்றம் ஏற்க மறுத்து, கூடுதல் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து வழக்கு மீண்டும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு, புதிய ஆதாரங்களும் வாக்குமூலங்களும் சேகரிக்கப்பட்டன. தற்போது இந்த வழக்கில் வீரமணி மீதான குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி, புகார் வந்தபோது காவல்துறையினர் எவ்வாறு செயல்பட்டனர் என்பதும் முக்கிய விசாரணைப் பகுதியாக மாறியுள்ளது. ஆதாரங்கள் உண்மையிலேயே அழிக்கப்பட்டனவா, யாருடைய உத்தரவின் பேரில் அவ்வாறு நடந்தது, இதில் தொடர்புடையவர்கள் யார் என்பதெல்லாம் விசாரணையின் முடிவில்தான் தெரியவரும். சிறுமிகளுக்கு நீதி கிடைப்பதுடன், விசாரணையில் தவறு செய்தவர்கள் இருந்தால் அவர்களும் சட்டப்படி பொறுப்பேற்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.