தமிழ்நாடு

தேசிய கீதத்தை அவமதித்த கால்நடை மருத்துவர்...  இதுகூட தெரியாதவர் டாக்டரா? முணுமுணுத்த பொதுமக்கள்

கால்நடைகள் தடுப்பூசி முகாமில் தேசிய கீதம் பாடிய போது கால்நடை மருத்துவர் நாய்க்கு ஊசி போட்ட சம்பவம் நடந்துள்ளது.

Malaimurasu Seithigal TV

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கதிராமங்கலம் ஊராட்சியில் தேசிய கால்நடைகள் நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் மூலம் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக நடைபெற்ற கால்நடைகளுக்கு பரவிவரும் கோமாரி நோய் தடுப்பூசி பணி குறித்த இரண்டாம் சுற்று திட்ட துவக்க விழா மாவட்ட ஆட்சித் தலைவர் அமர் குஷ்வாஹா தலைமையில்  நடைபெற்றது.

அப்போது விழாவில் பேசிய திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மகளிர் சுய உதவிக் குழுக்கள் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டது என்பதை மறந்துவிட்டு சுய உதவிக் குழு ஆரம்பிக்கப்பட்டதே தளபதி ஸ்டாலின் தான் என உளறினார்.  இதனால் அங்கு கூடியிருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் முகம் சுளித்தனர்.

அதுமட்டுமின்றி விழா நடந்து முடிந்ததும் பள்ளி மாணவிகளால் தேசிய கீதம் பாடப்பட்டது. அப்போது தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் கால்நடை மருத்துவர் ஒருவர் நாய்க்கு ஊசி செலுத்திக் கொண்டிருந்ததை பார்த்த சமூக ஆர்வலர்கள் ஒரு நாய்க்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கூட தேசிய கீதத்திற்கு கொடுக்க தெரியாத நபரால் எப்படி ஒரு கால்நடை மருத்துவராக வர முடிந்தது என்று முணுமுணுத்தனர்.

இந்த இருவேறு எதிர்மறை சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்தனர். இவ்விழாவில் மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜ் மாவட்ட ஒன்றிய குழு தலைவர் சூரியகுமார் ஒன்றிய குழுத்தலைவர் விஜயா அருணாசலம் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் நாசர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.