வேதாரண்யம் முல்லை பூவுக்கு புவிசார் குறியீடு கிடைக்க வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டதற்கு, நாகை விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆதனூர், கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், மருதூர், வாய்மேடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில், சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் முல்லைப் பூ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும், சுமார் 10 டன் வரை முல்லை மலர்கள் பறிக்கப்பட்டு, பல்வேறு, மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில், வேதாரண்யம் முல்லை பூவிற்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தமிழ்நாடு அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கையில், வேதாரண்யம் முல்லை பூவிற்கு புவிசார் குறியீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த வேதாரண்யம் விவசாயிகள், தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். அத்துடன், முல்லைப் பூவை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் மழைக்காலங்களில், பூக்கள் உற்பத்தி பாதிக்கப்படுவதால், தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.