தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை அதிகரித்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் நடத்தப்படும் ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’ இன்று (ஆகஸ்ட் 13) சென்னையில் நடைபெறுகிறது. கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் காலை 11 மணிக்கு தொடங்கும் இந்த மாநாட்டை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள், தொழில்முனைவோர் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
இதுதொடர்பாக தொழில்துறை மற்றும் முதலீட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கீர்த்தனா தனது சமூக வலைதளப் பதிவில், மாநாட்டிற்கான பணிகள் குறித்து முதலமைச்சரிடம் விளக்கி, நிகழ்வைத் தொடங்கி வைக்க அழைப்பு விடுத்ததாக தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டின் மீது உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் முக்கிய தளமாக இந்த மாநாடு அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதலீடுகள், தொழில் விரிவாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றை முன்னுரிமையாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழக அரசு, இந்த மாநாட்டின் மூலம் பல புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகும் என எதிர்பார்க்கிறது. குறிப்பாக உற்பத்தித் துறை, மின்னணு சாதனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதே மாநாட்டின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது.
தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி முதலீட்டு இலக்காக மேலும் வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, ‘வெற்றி தமிழ்நாடு 2026’ மாநாடு முக்கிய மைல்கல்லாக அமையும் என அரசுத் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டின் முக்கிய அம்சமாக, மொத்தம் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் ரூ.67,452 கோடி மதிப்பிலான முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முதலீடுகள் நடைமுறைக்கு வந்தால், மாநிலம் முழுவதும் சுமார் 1,06,998 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.