vijay bouncers issue Admin
தமிழ்நாடு

விஜய்யின் பவுன்சர்கள் முதியவர் தலையில் துப்பாக்கி வைத்தது சரியா? தவறா?

விஜய்யின் இந்த பாதுகாப்பு அவரது ரசிகர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது

மாலை முரசு செய்தி குழு

சென்னை : நடிகர் விஜய் சமீபத்தில் மதுரை விமான நிலையத்திற்கு வந்த போது, அவரது பாதுகாவலர், விஜய்யை நெருங்கி வந்த முதியவர் ஒருவரின் தலையில் துப்பாக்கியை வைத்த ஒரு வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரசிகர்களிடம் ஆபத்தான செயல்களை தவிர்க்குமாறு விஜய் வேண்டுகோள் விடுத்த சில நாட்களிலேயே அவரது பவுன்சர்களால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பவுன்சரின் செயல் சரியா? விஜயின் பாதுகாப்புக்கு நிஜமாகவே அந்த அளவிற்கு அச்சுறுத்தல் உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பவுன்சர்களால் ஏற்பட்ட சர்ச்சை :

நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங் கொடைக்கானலில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சென்ற போது பவுன்சர்கள் அத்துமீறி நடந்து கொண்டதாக அப்போதே புகார்கள் எழுந்தன. பவுன்சர்களால் விஜய்க்கு கெட்ட பெயர் ஏற்படுவதாக ரசிகர்கள் பலரும் ஆதங்கத்துடன் புகார் தெரிவித்தனர். ரசிகர்கள் கட்டுப்பாடு, ரசிகர்களின் நடத்தை, பாதுகாவலர்களின் செயல்பாடு குறித்து பலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் ஷூட்டிங் முடிந்து சென்னை திரும்புவதற்காக மதுரை விமான நிலையத்திற்கு விஜய் வந்த போது, வயதான ஒரு ரசிகர் தடுப்புகளை மீறி விஜய்யை நோக்கி ஓடி வந்தார். அப்போது விஜய்யின் பாதுகாவலர் துப்பாக்கியை எடுத்து ரசிகரின் தலையை குறி பார்ப்பது போல் இருந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இது சர்ச்சையாகி, பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

விஜய்யின் பாதுகாப்பு குழுவினர் விளக்கம் :

இந்நிலையில் விஜய்யின் பாதுகாப்பு குழுவினர் இதுகுறித்து விளக்கம் அளித்தனர். பாதுகாவலர் வாகனத்தில் இருந்து இறங்கியதும், அவரது துப்பாக்கியை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது ரசிகர் திடீரென வந்ததால், அவர் நிலை தடுமாறி விட்டார். துப்பாக்கியை யாரையும் குறி வைக்கவில்லை. ரசிகரின் உடலில் படாதவாறு விலக்கி பாதுகாப்பாக வைக்கவே முயற்சி செய்தார் என்று பாதுகாப்பு குழுவினர் தெரிவித்தனர். அந்த ரசிகர், இன்பராஜ், தனது தவறை ஒப்புக்கொண்டார். "நான் தடுப்புகளை தாண்டி குதித்தது தவறுதான். ஆனால் என்னை இழுத்து செல்லும் போது, நான் எந்த துப்பாக்கியையும் பார்க்கவில்லை" என்று அவர் கூறினார்.

ரசிர்களுக்கு விஜய் வேண்டுகோள் :

சமீபத்தில் விஜய் தனது ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். தனது பொது நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். மே 1-ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய், ரசிகர்கள் வாகனங்கள் மீது ஏறுவது, ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவது தன்னை மிகவும் பயமுறுத்துவதாக கூறினார். "என் வேனை பின்தொடர்ந்து வராதீர்கள்.

ஹெல்மெட் இல்லாமல் டூவீலரில் ஸ்டண்ட் செய்யாதீர்கள். அது எனக்கு பயமாக இருக்கிறது" என்று விஜய் ரசிகர்களிடம் கூறினார். "விரைவில் உங்களை கட்சி கொடியின் கீழ் சந்திப்பேன். பாதுகாப்பாக இருங்கள். என்னை பார்த்துவிட்டு பத்திரமாக வீட்டுக்கு செல்லுங்கள்" என்று அவர் மேலும் கூறினார். இதற்கு முன்பு கோவையில் நடந்த ஒரு அரசியல் நிகழ்ச்சியில், ரசிகர் ஒருவர் விஜய்யின் வேன் மீது ஏறினார். இதுவும் குறிப்பிடத்தக்கது.

‘Y’ பிரிவு பாதுகாப்பு :

விஜய்க்கு தற்போது ‘Y’ பிரிவு பாதுகாப்பு உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் பிப்ரவரி 2025-ல் இந்த பாதுகாப்பை வழங்கியது. இதில் CRPF வீரர்கள், கமாண்டோக்கள் உட்பட 11 பேர் உள்ளனர். அவர்கள் விஜய்க்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிப்பார்கள். மேலும் பொது நிகழ்ச்சிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்துவார்கள். அப்படி இருக்கும் போது துப்பாக்கி ஏந்திய பவுன்சர்களும் எப்போது விஜய்யுடன் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. நிஜமாகவே அந்த அளவிற்கு விஜய் உயிருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதா? என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

ரசிகர்களின் பாதுகாப்பு குறித்து பேசும் விஜய், எதற்காக CRPF வீரர்கள் பாதுகாப்பையும் மீறி பவுன்சர்களை வைத்துள்ளார்? அப்படியானால் மத்திய அரசின் பாதுகாப்பில் அவருக்கு நம்பிக்கை இல்லையா? விஜய்யின் இந்த பாதுகாப்பு அவரது ரசிகர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளதாகவும், அவரது பாதுகாப்பு குழுவினராலேயே ரசிகர்களுக்கு ஆபத்தான சூழல் இருப்பதாகவும் பலரும் புகார் கூறி வருகிறார்கள்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்