நடிகரும் தவெக தலைவருமான விஜய் சார்பில், 'Z' பிரிவு பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இதுவரை கரூர் சென்று விஜய் பாதிக்கப்பட்டவர்களை பார்க்காத நிலையில், அவர் தனது பாதுகாப்பை அதிகரிக்கக் கோரியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தியாவில் வி.ஐ.பி-க்கள் மற்றும் பொதுப் பிரபலங்களுக்கு அவர்களது அச்சுறுத்தல் நிலையைப் பொறுத்து வழங்கப்படும் உயர் பாதுகாப்புப் பிரிவுகளில் 'Z' பிரிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்தியாவில், பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் தனிநபர்களுக்கு, அவர்களது அச்சுறுத்தல் குறித்த உளவுத்துறை (Intelligence Bureau - IB) மற்றும் 'ரா' (R&AW) போன்ற பாதுகாப்பு அமைப்புகளின் முடிவுகளின் அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs - MHA) பாதுகாப்பு வகைகளை நிர்ணயிக்கிறது. இந்தப் பாதுகாப்புப் பிரிவுகள் SPG, Z+, Z, Y+, Y, மற்றும் X எனப் பல அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில், 'Z' பிரிவு என்பது நாட்டின் மூன்றாவது மிக உயர்ந்த பாதுகாப்புப் பிரிவாகக் கருதப்படுகிறது.
'Z' பிரிவு பாதுகாப்பு என்பது ஓரளவுக்கு அதிக அச்சுறுத்தல் உள்ள நபர்களுக்கு வழங்கப்படுகிறது. இது 'Z+' பாதுகாப்பை விடக் குறைவான பாதுகாப்பு அளவைக் கொண்டிருந்தாலும், மிக உறுதியான பாதுகாப்பை வழங்குகிறது. இந்த அமைப்பில் மொத்தம் 22 பாதுகாப்பு வீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
'Z' பிரிவில் பாதுகாப்பு அளிக்கப்படும் விதமானது, பாதுகாக்கப்படும் நபரின் இருப்பிடம் மற்றும் பயணங்களின் போது முழுமையான ஒருங்கிணைந்த பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்கிறது. இதில் மொத்தம் 22 பேர் கொண்ட ஒரு குழு ஈடுபடுத்தப்படும். இதில் 4 முதல் 6 பேர் வரை மத்திய ஆயுதப்படை கமாண்டோக்கள் (Central Armed Police Forces - CAPF) இருப்பார்கள். இந்த கமாண்டோக்கள் தேசியப் பாதுகாப்புப் படை (NSG), இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை (ITBP) அல்லது மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) போன்ற பிரிவுகளில் இருந்து அனுப்பப்படுவார்கள். மீதமுள்ளவர்கள் மாநில காவல்துறைப் பணியாளர்களாக இருப்பார்கள்.
பயணங்களின் போது, பாதுகாக்கப்படும் நபருடன் சுமார் ஆறு ஆயுதம் ஏந்திய காவலர்கள் உடன் இருப்பார்கள். இந்த பாதுகாப்பு ஏற்பாட்டில், கமாண்டோக்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் பயணிப்பதற்காக ஒரு Escort Vehicle மற்றும் Pilot Vehicle ஆகியவை வழங்கப்படும். இது மட்டுமல்லாமல், தேவைக்கேற்ப, அந்தப் பிரபலத்தின் பயணங்களுக்காகக் குண்டு துளைக்காத வாகனங்கள் (Bulletproof Vehicle) வழங்கப்படுவதுண்டு.
பாதுகாக்கப்படும் நபரின் இல்லத்தில் நிரந்தரமாக இரண்டு காவலர்கள் (அத்துடன் சுழற்சி முறையில் எட்டுப் பேர்) பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். 'Z' பிரிவு பாதுகாப்பு என்பது, முக்கியப் பதவியில் இருக்கும் அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோருக்கு, அவர்களது உயிர்க்குக் குறிப்பான அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை உறுதிப்படுத்திய பின்னர் வழங்கப்படுகிறது. அரசு வழங்கும் இந்த பாதுகாப்பு என்பது, தனிநபரின் அச்சுறுத்தல் மதிப்பீட்டின் அடிப்படையில் அவ்வப்போது மறுஆய்வு செய்யப்பட்டு, தேவைக்கேற்பத் தொடரப்படலாம், மேம்படுத்தப்படலாம் அல்லது குறைக்கப்படலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.