தமிழ்நாடு அரசியல் களத்தில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) ஒரு புதிய மாற்று சக்தியாக உருவெடுத்தது. ஆனால் இன்று? கட்சி தொடங்கப்பட்ட நாள் முதலே, விஜய்யும், அவரது தலைமை நிர்வாகிகளும் பேசி வரும் அடிப்படை அஜெண்டா ஒன்றுதான்: "நாங்கள் அனைத்துக் கட்சிகளுக்கும் மாற்றாக வந்திருக்கிறோம்; எங்களைத் தேடி வருவோருடன் கூட்டணி". மேலும், விஜய்யின் அரசியல் விமர்சனம் இரண்டு மையப்புள்ளிகளைச் சுற்றியே அமைந்துள்ளது. அதில் ஒன்று, தமிழகத்தில் ஆளும் தி.மு.க.வை அரசியல் எதிரியாகப் பார்ப்பது. மற்றொன்று, தேசிய அரசியலில் உள்ள பா.ஜ.க.வை கொள்கை ரீதியான எதிரியாகப் பார்ப்பது. இந்த அஜெண்டாவை முன்வைத்துதான் அவர் பொதுக்கூட்டங்களிலும், நிர்வாகக் கூட்டங்களிலும் பேசி வருகிறார். இந்த நிலைப்பாட்டைத் தொண்டர்கள் மத்தியில் ஆழமாகப் பதிய வைக்க அவர் முனைப்பு காட்டி வந்தார்.
ஆனால், த.வெ.க.வின் அரசியல் பாதை கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு தள்ளாட ஆரம்பித்திருப்பதுதான் கள நிலவரமாக உள்ளது. 41 அப்பாவி மக்கள் உயிரிழந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று இரவு, கொத்து கொத்தாக மக்கள் இறந்து கொண்டிருக்க விஜய் குறித்த நேரத்தில் தனி விமானம் மூலம் சென்னைக்குத் திரும்பிவிட்டார். என்ற தகவல், கட்சியின் மீது இருந்த நம்பிக்கையை அதலபாதாளத்துக்குத் தள்ளியது.
அந்தச் சோகமான சம்பவத்துக்குப் பிறகு, கட்சியின் செயல்பாடு மேலும் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. 41 உயிர் பலிக்கு பிறகும் ஒட்டுமொத்த த.வெ.க.வின் நிர்வாகிகளும் முழுமையாக அமைதி காத்தனர். கட்சியின் தலைவரோ, நிர்வாகிகளோ யாரும் உடனடியாகப் பொறுப்பேற்றுப் பேசவில்லை. இந்தச் செயல்தான், அரசியல் விமர்சகர்களின் அடிப்படை கேள்வியை எழுப்பியுள்ளது. த.வெ.க.வின் நிர்வாகிகள் இதற்குச் சொல்லும் காரணம், "நாங்கள் நள்ளிரவு மூன்று மணி வரை எல்லையில் காத்திருந்தோம்; காவல்துறையினர் எங்களை அனுமதிக்கவில்லை" என்பதுதான்.
ஆனால், ஒரு வலிமையான அரசியல் கட்சியாக உருவாக நினைப்பவர்கள் இப்படி ஒரு காரணத்தைச் சொல்லலாமா? காவல்துறை அனுமதி மறுத்திருந்தாலும், இது சமூக வலைதளங்களின் காலம். கட்சியின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் அல்லது வேறு யாரேனும் உடனடியாக ஒரு லைவ் வீடியோ மூலமாகவாவது வந்து, "காவல்துறை எங்களைத் தடுக்கிறார்கள், ஆனால் நாங்கள் மக்களின் துயரத்தில் பங்கெடுக்க வந்துள்ளோம்" என்று மக்களுக்கு ஒரு உறுதியை அளித்திருக்கலாம் அல்லவா?
ஒரு கட்சி, இப்படி ஒரு மிகப்பெரிய துயரச் சம்பவத்தில் பல நாட்களுக்குக் காணாமலே போனால், இவர்கள் மக்கள் பிரச்சினைகளுக்காக ஆட்சிக்கு வந்தால், எப்படித் துணிச்சலாகவும், உறுதியுடனும் செயல்படுவார்கள்? துணிந்து நின்று மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்குத் தேவையான உரிமைகளை எப்படிப் போராடி வாங்கிக் கொடுப்பார்கள்? என்ற அடிப்படை அரசியல் சந்தேகம் மக்கள் மத்தியில் எழுவது இயல்புதானே? ஒரு கட்சிக்குச் சோகமான நேரத்தில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, களத்தில் நிற்க துணிச்சல் இல்லையென்றால், அது எப்படி மாற்றத்தை உருவாக்கி, மக்கள் நலனுக்காக உறுதியான முடிவுகளை எடுக்க முடியும் என்ற விவாதம் இன்று அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளது.
கரூர் சம்பவம் த.வெ.க.வின் மீதான நம்பிக்கையைக் கிட்டத்தட்ட தரைமட்டமாக்கிவிட்ட நிலையில், இப்போதைய அரசியல் நகர்வு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் த.வெ.க. இணையப் போவதாகச் செய்திகள் உலா வருகின்றன. இதுதான், விஜய்யின் ஆரம்ப நிலைப்பாட்டுக்கு மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது. ஒருபுறம் தி.மு.க. அரசியல் எதிரி, பா.ஜ.க. கொள்கை எதிரி என்று பேசி வந்த விஜய், இப்போது அந்தக் கொள்கைகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, எதிர்த்துக் கொள்கை வைத்திருக்கும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க நேரிட்டால், அது த.வெ.க.வின் அரசியல் அஜெண்டாவைச் சிதைத்துவிடும்.
மாற்றுக் கட்சியாக, அனைத்துக் கட்சிகளுக்கும் சவால் விடும் சக்தியாக, ஒரு புதிய அஜெண்டாவைக் கொண்டு வருகிறார் என்பதால் தான், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்னும் அரசியல் களத்தில் மதிக்கப்படுகிறார். வாக்கு சதவிகிதமும் கணிசமாக அதிகரித்துள்ளது. தோற்றாலும், கொள்கைக்காகத் தனித்து நிற்கிறார் என்ற பிம்பம் அவருக்கு ஒரு பெரிய பலம். அப்படியொரு மாற்றுச் சக்தியாக உருவாகக் கனவு காணும் த.வெ.க., அதன் கொள்கைகளுக்கு நேர் எதிராகக் கூட்டணி வைக்க நேரிட்டால், நிச்சயம் பல த.வெ.க. தொண்டர்களே அதை விரும்ப மாட்டார்கள்.
விஜய்யை நம்பி, திராவிட மற்றும் தேசியக் கட்சிகளின் மீது நம்பிக்கை இழந்த இளைஞர்கள் பலர், சீமானிடம் இருந்து விஜய்க்கு ஆதரவாக மாறுவார்கள் என்று கூறப்படும் நிலையில், கூட்டணி வைக்கும் முடிவு, அந்தப் பெரும் இளைஞர் கூட்டத்தில் பலரை மீண்டும் பின்வாங்க வைக்கக்கூடும் என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். தற்போதைய கள நிலவரப்படி, கரூர் சம்பவத்தால் ஏற்பட்ட இழப்பைத் தாண்டி, இந்த ஒரு கூட்டணி முடிவு, த.வெ.க.வின் அரசியல் ஸ்திரத்தன்மையையும், நம்பகத்தன்மையையும் கேள்விக்குறியாக்கி, அதன் எதிர்கால அரசியல் பயணத்தில் ஒரு பெரிய தடுமாற்றத்தை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.