dhrapuram road show  
தமிழ்நாடு

“தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களைப் பார்க்கும் ஆள் நான் கிடையாது!” – தாராபுரத்தில் விஜய் ஆவேசம்!

என் சொந்தங்களை எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் போய்ப் பார்ப்பேன்...

Mahalakshmi Somasundaram

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் சத்யபாமாவுக்கு ஆதரவாக, அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் இன்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது, “தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களைப் பார்க்கும் ஆள் நான் கிடையாது. என் சொந்தங்களை எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் போய்ப் பார்ப்பேன்” என்று அவர் பேசியுள்ளார். மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளிலும் நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து விஜய் இன்று தாராபுரம் தொகுதியில் ரோடு ஷோ மேற்கொண்டார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்ற அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் வழியாக தாராபுரம் பகுதிக்குச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யைக் காண வழிநெடுகிலும் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். அவரை வரவேற்று மக்கள் ஆரவாரம் செய்தனர். மேலும், ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தொண்டர்கள், தங்களது புகைப்படங்களையும் அவரிடம் வழங்கி, மக்களின் கோரிக்கை மனுக்களையும் விஜய் பெற்றுக்கொண்டார். ரோடு ஷோவின்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய விஜய், “என் மக்களைச் சந்திக்க நான் ஏன் தேர்தல் வரும்வரை காத்திருக்க வேண்டும்? தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களைப் பார்க்கிற ஆள் நான் கிடையாது. என் சொந்தங்களை எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் போய்ப் பார்ப்பேன்” என்று தெரிவித்தார்.

மேலும், “நான் மதுராந்தகம் சென்றிருந்தேன். அங்கு ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள மக்களைச் சந்தித்தேன். அதேபோல், தாராபுரத்தில் உள்ள என் சொந்தங்களையும் பார்க்க வந்திருக்கிறேன்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், தன்னை ஆதரிப்பது குறித்து மக்கள் மத்தியில் பேசியதாகக் குறிப்பிட்டார். அப்போது, “அதை வெறும் ஓட்டுகளுக்காக மட்டும் சொல்லவில்லை” என்று தெரிவித்தார். முன்னதாக ஸ்டாலின் பேசியது குறித்துப் பேசிய விஜய், “நேற்று முன்தினம் ஸ்டாலின் சார் வந்து என்ன பேசிவிட்டுப் போனார்? தயவுசெய்து கேளுங்கள். அப்பாவையும் பிள்ளையையும் எடுத்து வைத்துக்கொண்டு பேசிவிட்டுப் போய்விட்டார்” என்று விமர்சித்தார்.

மேலும், தன்னைப் பற்றி யார் என்ன பேசினாலும் பொறுத்துக்கொள்வதாகக் குறிப்பிட்ட விஜய், தனது சகோதரிகளையோ அல்லது ஒருவரின் வீட்டில் இருக்கும் பெண்களையோ அவதூறாகப் பேசினால் அமைதியாக இருக்க மாட்டேன் என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.தாராபுரம் இடைத்தேர்தலையொட்டி விஜய் மேற்கொண்ட ரோடு ஷோவும், அவரது பேச்சும் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்