தமிழ்நாடு

“'விஜய் தளபதி'... பாலியல் குற்றவாளிகளை சுட்டுத்தள்ள உத்தரவிட்டாரா?” - வடக்கே அடிக்கும் FAKE NEWS புயல்!

மாடு வதை தொடர்பாக முதலமைச்சர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்" உள்ளிட்ட பல்வேறு பொய் செய்திகளும்

Muthu Lakshmi

தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழக செயல்பாடுகள் குறித்து சமூக வலைதளங்களில் அடுத்தடுத்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில்,ல சில செய்திகள் எந்தவித அதிகாரப்பூர்வ ஆதாரமும் இல்லாமல் உருவாக்கப்பட்ட போலி செய்திகள் என தெரியவந்துள்ளது. குறிப்பாக, இந்தியில் சில இன்ஸ்டாகிராம் மற்றும் யூடுப் இன்ஃப்ளூயன்சர்கள், முதலமைச்சர் விஜயை புகழும் வகையில் ஒரே மாதிரியான தகவல்களை ரீல்ஸ்களாக உருவாக்கி பகிர்ந்து வருவது கவனம் பெற்றுள்ளது.

2024 ம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் இரண்டு ஆண்டுகளில் ஆட்சியை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது என்று அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து பேச்சுக்கள்  தொடர்ந்தது. அதில் சில விமர்சனங்களும் அடங்கி இருந்தது. குறிப்பாக இந்த வெற்றிக்கு சமூக வலைத்தளமும், அதில் செயல்படும் இன்ஃப்ளூயன்சர்களும் தான் பின்புலமாக இருந்ததாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அவர் முதல்வராக பொறுப்பேற்ற பின்பு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் அதிரடி உத்தரவுகள் பிறப்பித்ததாக கூறி சமூக வலைதளங்களில் போலியான தகவல்கள் பரப்பப்பட்டு வந்தது.

தற்போது அது வெளி மாநிலங்கள் வரை பரவி பல்வேறு பொய் தகவல்கள் இணையத்தில் வலம் வருகிறது. குறிப்பாக, "முதலமைச்சர் விஜய் மசூதி இமாம்களுக்கு அரசு சம்பளம் வழங்க உத்தரவிட்டுள்ளார்", "மசூதிகள் மற்றும் மதரஸாக்களின் மின்சாரக் கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும்" எனக் கூறும் பதிவுகள் இன்ஸ்டா  மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஜூலை 9, 2026 போன்ற தேதிகளைக் குறிப்பிட்டு வெளியிடப்பட்ட பதிவுகளிலும் இதே தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

ஆனால், இந்தக் கூற்றுகளுக்கு ஆதரவாக தமிழக அரசிடமிருந்து அல்லது முதலமைச்சர் அலுவலகத்திடமிருந்தோ எந்தவொரு அதிகாரப்பூர்வ அரசாணை, செய்திக்குறிப்பு அல்லது நிதி ஒதுக்கீடு குறித்த தகவலும் வெளியாகவில்லை. எனவே, இந்த தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ ஆதாரம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதுமட்டுமின்றி, "பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை என்கவுண்டர் செய்ய முதலமைச்சர் விஜய் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்", "ஜியோ சிம் ரீசார்ஜ் கட்டணம் உயர்த்தப்பட்டால் தமிழகத்தில் ஜியோ சிம்முக்கு தடை விதிக்கப்படும்", "மாடு வதை தொடர்பாக முதலமைச்சர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்" உள்ளிட்ட பல்வேறு பொய் செய்திகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

அதேபோல், கோவில் உண்டியல் காணிக்கைகளை பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் கட்டுவதற்கு பயன்படுத்த முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டதாகவும் சில பதிவுகள் கூறுகின்றன. பள்ளி சீருடையில் இருக்கும் மாணவர்கள் அனைத்து பேருந்துகளிலும் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற தகவலும் விஜய் அரசின் புதிய அறிவிப்பாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், மாணவர்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல்களில் குறிப்பிடத்தக்க அம்சமாக, ஒரே மாதிரியான கூற்றுகள் இந்தி மொழியில் இயங்கும் சில இன்ஃப்ளூயன்சர்கள் மற்றும் சமூக வலைதள பக்கங்கள் மூலம் தொடர்ச்சியாக பகிரப்படுகின்றன. குறிப்பாக, முதலமைச்சர் விஜயின் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் AI மூலம் உருவாக்கப்பட்ட காட்சிகளை பயன்படுத்தி, அவர் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிவித்ததாகக் கூறும் ரீல்ஸ்கள் உருவாக்கப்படுகின்றன.

இதனால், உண்மையான அரசு அறிவிப்புகளுக்கும், சமூக வலைதளங்களில் உருவாக்கப்படும் கற்பனைத் தகவல்களுக்கும் இடையே குழப்பம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. விஜயை புகழும் வகையில் இந்த பதிவுகள் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அவற்றில் குறிப்பிடப்படும் பல அறிவிப்புகளுக்கு அதிகாரப்பூர்வ ஆவணங்கள் எதுவும் இல்லை. இவற்றில் எவை உண்மையான அரசு அறிவிப்புகள், எவை சமூக வலைதளங்களில் உருவாக்கப்பட்ட தகவல்கள் என்பதை அதிகாரப்பூர்வ ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது.

குறிப்பாக, AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்படும் போலி வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்கள் அதிகரித்து வரும் நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகும் எந்தவொரு அரசியல் தகவலையும் அதிகாரப்பூர்வ அரசு அறிவிப்புகள் அல்லது நம்பகமான செய்தி ஆதாரங்கள் மூலம் சரிபார்த்த பிறகே பகிர வேண்டும் என்பதே முக்கியமானதாகும்.

மேலும் இது போன்ற பொய் செய்திகளில் “தங்கள் மாநில முதல்வர்கள் விஜயிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை என்று குறிப்பிடுகின்றனர். இதனால்  அரசியல் தலைவர்களை ஒருவருடன் ஒருவரை ஒப்பிடும்போது அந்த ரீல்ஸிற்கு அதிக கமெண்ட்,  லைக்ஸ் மற்றும் ஷேர் செய்யப்படுகிறது. அங்கே விவாதங்களும் எழுவதால் அந்த ரீல்ஸ் அதிக பார்வையாளர்களை சென்றடைவதோடு பொய்களும் பரவலாக பரவி வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்