திருச்சி மரக்கடையில் நடிகர் விஜய் தனது தமிழக வெற்றி கழகத்தின் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கிய நிகழ்வு, தமிழக அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், இந்த எதிர்பார்ப்பு, விஜய் ரசிகர்களின் கட்டுப்பாடற்ற ஆர்வத்தால், பயணத்தின் தொடக்கத்திலேயே பெரும் சவாலாக மாறியுள்ளது.
23 நிபந்தனைகள்
விஜய் 30 நிமிடம் மட்டுமே பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 10:30 மணியில் இருந்து 11 மணி வரை மட்டுமே அவர் அந்த இடத்தில் பேச முடியும்.
காலை 9:30 மணி அளவில் மரக்கடை பகுதிக்கு தொண்டர்களை வரவழைத்திருக்க வேண்டும். ரோடு ஷோ நடத்தக்கூடாது. விஜய் வரும்போது அவருடைய வாகனத்துக்கு முன்பும் பின்பும் 5 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி . வேறு வாகனங்கள் வந்தால் அனுமதி மறுக்கப்படும். மருத்துவ வசதி ஆம்புலன்ஸ் தீயணைப்பு வாகனங்கள் அனைத்தும் தமிழக வெற்றிக்கழகத்தினர் செய்து கொள்ள வேண்டும். குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகளை அழைத்து வரக்கூடாது.
பொதுமக்கள் யாருக்கும் போக்குவரத்தில் இடையூறு செய்யக்கூடாது. கூம்பு வடிவ ஸ்பீக்கர்களை வைக்கக்கூடாது. தவெக தொண்டர்கள் மிக நீளமான குச்சி கொடி எடுத்து வரக்கூடாது. பள்ளிக்கு செல்பவர்கள், விமான நிலையம் செல்பவர்கள், மருத்துவமனை செல்பவர்களுக்கு, வழி விட வேண்டும். ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பவை உள்ளிட்ட 23 நிபந்தனைகளை திருச்சி மாநகர காவல் துறையினர் விதித்துள்ளது.
தடையெல்லாம் காற்றில் பறந்தது
"அளவுக்கு மிஞ்சினால் அனைத்தும் ஆபத்தே" என்ற பழமொழிக்கு ஏற்ப, ரசிகர்களின் பேராசை, விஜய்க்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
காவல்துறையின் கடும் நிபந்தனைகளுடன், காலை 10.30 முதல் 11.00 மணி வரை மரக்கடையில் பேசுவதற்கு மட்டுமே விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், காலை 6 மணிக்கே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மரக்கடை பகுதியை முற்றுகையிட்டு, விஜயின் வாகனப் பயணம் தடைபடுவதற்கான சூழலை உருவாக்கினர். ஒரு ரசிகனாக, தங்கள் தலைவரை நேரில் காண வேண்டும் என்ற ஆசை understandable. ஆனால், அது ஒரு அரசியல் கட்சியின் தொடக்கப் பயணத்தை, அதுவும் காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறி, முற்றிலும் சிதைக்கும் அளவுக்கு சென்றுவிடுவது, ஒரு கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.
விஜயின் பிரச்சார பேருந்தை சுற்றிலும் இருசக்கர வாகனங்கள், கார்கள், மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அணிவகுத்து வருகின்றனர்.
சரியாக 9.47 மணிக்கு விஜய் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். ஆனால் அவர் இன்னும் பிரச்சாரம் நடக்கும் இடத்திற்கே இன்னும் வந்து சேரவில்லை. விஜய் விமான நிலையத்திலிருந்து மரக்கடைக்கு செல்லும் சாலை முழுவதுமே ரோடு ஷோ போல ஆகிவிட்டது. தவெக ஆதரவாளர்கள் இளைஞர்கள் வாகனங்கள் புடை சூழ இது ரோடு ஷோபோலதான் காட்சியளிக்கிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.