தமிழ்நாடு

கிராம சபை கூட்டம்: உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு உத்தரவிட்ட   தமிழக அரசு!

Tamil Selvi Selvakumar

தமிழகத்தில் அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டங்கள் நடத்த உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கிராம சபை கூட்டங்கள் நடத்த உத்தரவு:

நாடு முழுவதும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், காந்தி ஜெயந்தியையொட்டி ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் கிராம சபை கூட்டங்களை சுழற்சி முறையில் வரும் 2ம் தேதி காலை 11 மணியளவில் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

கிராம சபை கூட்டங்கள் அனைத்து ஊராட்சிகளிலும் நடத்த வேண்டும், இடம் மற்றும் நேரம் கிராம மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். இந்த கூட்டத்தில், ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, டெங்கு பரவல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், 100 நாள் வேலை திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கிராம சபை கூட்டங்கள் குறித்த அறிக்கையை அக்டோபர் 12-ம்  தேதிக்குள் அனுப்பவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.