தமிழ்நாடு

சாலை வசதி இல்லாததால் பறிபோகும் உயிர்கள்... பரிதவிக்கும் கிராமம்!!

Malaimurasu Seithigal TV

வேலூர் அருகே மலை கிராமம் ஒன்றிற்கு நீண்ட நாட்களாக சாலை வசதி மற்றும் மருத்துவ வசதி இல்லாம, அம்மக்கள் அனைவரும் அவசர சிகிச்சை கிடைக்காமல் சிரமப்பட்டும், சிலர் இறந்து போகும் அவல நிலை தொடர்கிறது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட மலைப்பகுதியில் அமைந்துள்ளது அல்லேரி மலை கிராமம். இம்மலை கிராமத்தை சுற்றி சுருட்டன் கொல்லை, பலாமரத்துகொல்லை, நெல்லிமரத்துகொல்லை,  சடையன் கொல்லை, வாழைப்பந்தல், அத்திமரத்துக்கொல்லை, ஆட்டுக்கொந்தரை கிராமம் உள்ளிட்ட 12 கிராமங்கள் உள்ளன. 

இங்கு சுமார் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் பல ஆண்டுகளாக அல்லேரி மலை கிராமத்திற்கு முறையான சாலை வசதி இல்லாததால் இந்நாள் வரைக்கும் அம்மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

கடந்த மே மாதம் 27ஆம் தேதி இரவு அத்திமரத்துக்கொல்லை பகுதியை சேர்ந்த விஜி- பிரியா தம்பதியினரின் ஒன்றரை வயது பெண் குழந்தை தனுஷ்காவை விஷப்பாம்பு கடித்ததில் உரிய நேரத்தில் சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த குழந்தையின் சடலத்தை வீட்டிற்கு எடுத்தும் வரும் வழியில், சாலை வசதி இல்லாமல், பாதி வழியிலேயே இறக்கி விட்டதால், இறந்த குழந்தையின் சடலத்தை தூக்கிகொண்டு நடந்தே கிராமத்திற்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டது.

இந்த அவல சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி ஏற்படுத்திய பரபரப்பு குறைவதற்குள், இதன் தொடர்ச்சியாக, நேற்றைக்கு முன்தினம் இரவு ஆட்டுக்கொந்தரை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சங்கர் என்பவரை நள்ளிரவு 12 மணிக்கு பாம்பு கடித்ததில், அவரும் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல போதிய சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தார்.

இச்சம்பவங்கள் அல்லேரி மலை கிராம மக்களை நீங்கா துயரில் ஆழ்த்தி தொடர்ந்து சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்ற துயர சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க அல்லேறி மலை கிராமத்திற்கு தரமான தார் சாலை மற்றும் உரிய மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் அரசுக்கு கண்ணிர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.