விருதுநகர்; சின்னகாமன்பட்டியில் உள்ள கோகுலேஷ் பட்டாசு ஆலையில் ஜூலை 1–ஆம் தேதி காலை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேரில் 2 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 7 -ஆக உயர்ந்தது.
முதல்வர் மு.க. ஸ்டாலின், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம், லேசான காயம் அடைந்தோருக்கு ரூ. 50,000 நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.
சாத்தூர் காவல்துறை இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, ஆலையின் மேற்பார்வையாளர் ரவி (36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. விருதுநகர் மாவட்ட எஸ்.பி. கண்ணன் மற்றும் சாத்தூர் டிஎஸ்பி நாகராஜன் தலைமையில் இந்த விசாரணை நடைபெறுகிறது.
இறந்தவர்களின் உடல்கள் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருக்கும் நிலையில், குடும்பத்தினர் ஆலை நிர்வாகத்திடமிருந்து தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒழுங்கா இருக்கணும், கோஷம் போட்டா வேற மாதிரி ஆயிடும் என்று விருதுநகர் எஸ்பி கண்ணன் மிரட்டல் பாணியில் பேசிய விடீயோ இணையத்தில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.
காவல் விசரணையில் அடித்து கொல்லப்பட்ட திருபுவனம் அஜித் குமார் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், தற்போது மீண்டும் காவலர் பாதிக்கப்பட்ட மக்களை மிரட்டும் தொனியில் பேசியிருப்பது, மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி “விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், நிவாரணம் கோரி போராடிய மக்களைப் பார்த்து "ஒழுங்கா இருக்கணும், இல்லனா வேற மாதிரி ஆகிடும்" என்று விருதுநகர் எஸ்.பி. மிரட்டியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? மடப்புரம் அஜித்குமார் மாதிரியா?
பட்டாசு ஆலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் நிர்வாகத் திறன் இல்லை; போராடும் மக்களின் கோரிக்கையைக் கேட்கக் கூட மனமில்லை; மக்களை மிரட்டவும், அச்சுறுத்தவும் மட்டும் அரசின் குரல்கள் உயர்கின்றனவா? வரலாற்றுப் பாசிசம் தோற்றுவிடும் ஸ்டாலின் அரசின் கொடுங்கோன்மையிடம்!
மக்களை மிரட்டுவது, வன்முறையை கட்டவிழ்த்து விடுவது , சட்டத்தை மீறி செயல்படுவதை எல்லாம் உடனடியாக கைவிட வேண்டும் என ஸ்டாலின் மாடல் அரசை எச்சரிக்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.