ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணையிலிருந்து முதல் போக சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கொடிவேரி அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரால் சுமார் 24 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், இன்று திறக்கப்பட்ட தண்ணீர், ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி வரை 120 நாட்களுக்கு வெளியேற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையிலிருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன வாய்கால்கள் மூலம் கோபி, அந்தியூர், பவானி உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்பேரில் கொடிவேரி அணையிலிருந்து தடப்பள்ளி வாய்க்காலில் வினாடிக்கு 300 கன அடி தண்ணீரும் அரக்கன்கோட்டை வாய்க்காலில் வினாடிக்கு 200 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. முதல் போக பசானத்திற்கான தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகள் ஆகியோர் திறந்து வைத்தனர்.
மேலும் முதல் போக பாசனத்திற்கு இன்று முதல் ஆகஸ்ட் 18 ந் தேதி வரை (120 நாட்களுக்கு) சுமார் 8,81,250 மில்லியன் கன அடிக்கு மிகமால் தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து, திறந்துவிடப்பட்ட நீரை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி வணங்கினர்.
இந்நிலையில், இந்த முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் தடப்பள்ளி அரக்கன்கோட்டை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
இதையும் படிக்க } கோக்கர்ஸ் வாக் சுற்றுலாத்தலம் 7 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்..! - நகராட்சி நிர்வாகம் தகவல்.