தமிழ்நாடு

"எடப்பாடியுடன் நாங்களும் இணைய தயார்....!" - திருமாவளவன் .

Malaimurasu Seithigal TV

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார் குப்பம் கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இன்று வரை 14 நபர்கள் உயிரிழந்துள்ளனர், இதில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 42 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் அவசர சிகிச்சை பிரிவில் 10 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று சிகிச்சை பெற்று வரும் 42 நபர்களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார், இவர் உடன் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் சீலா தேவி சேரன், ஆற்றல் அரசு  உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

இதன் பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,....

கள்ளச்சாராயத்தால் 20 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாகவும், மதுவிலக்கு கொள்கையை நிறைவேற்றினால் மட்டுமே சாராயத்தை ஒழிக்க முடியும் என்றும், கள்ளச்சாராயத்தை தடுக்க சிறப்பு உளவுப் பிரிவு அமைத்து கள்ளச்சாராயத்தை  தடை செய்ய வேண்டும் என்று கூறினார்.

மேலும், மதுவிலக்கை படிப்படியாக நடைமுறை ப்படுத்த வேண்டும் அதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும், கள்ளச்சாராயம் புழக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.   

அதோடு,   " மதுவிலக்கு நடைமுறைப்படுத்த கோரி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி போராட்டம் நடத்தினால் அவருடன் இணைந்து நாங்களும் போராட்டத் தயார்", என பேட்டியளித்துள்ளார்.