தமிழ்நாடு

அரசிதழில் விடுபட்ட மஞ்சுவிரட்டு.. அறவழியில் போராட்டம்.. மஞ்சுவிரட்டு நல சங்கம் அறிவிப்பு..!

தமிழர் பாரம்பரிய மஞ்சுவிரட்டு நல சங்கம் சார்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசிதழில் விடுபட்ட 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் எருது விடும் திருவிழா நடத்த அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

Malaimurasu Seithigal TV

தமிழர் பாரம்பரியம்

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்துபடுவது வழக்கம். இந்நிலையில், அடுத்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் மஞ்சுவிரட்டு போட்டி நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட தமிழர் பாரம்பரிய மஞ்சுவிரட்டு நல சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் டாக்டர். ஜெயச்சந்திர பானு ரெட்டியிடம் மனு அளிக்கப்பட்டது.

உடனடி நடவடிக்கை

அந்த மனுவில், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாரம்பரிய மஞ்சுவிரட்டு நடத்த அரசிதழில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளது. எனவே, அந்த கிராமங்களை அரசிதழில் சேர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகளை தடை செய்ய நினைப்பது தவறு.

அறவழி போராட்டம்

இதனை கலாச்சார விழாவாக அறிவிக்க வேண்டும் எனவும், அரசிதழில் இந்த கிராமங்களை சேர்க்காவிட்டால் கிராமங்களில் உள்ள மக்களை ஒன்று திரட்டி அறவழியில் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழர் பாரம்பரிய மஞ்சுவிரட்டு நல சங்கம் சார்பில் அந்த மனுவில் தெரிவித்தனர்.