தமிழ்நாடு

ஒன்றியம் என்ற வார்த்தை இனியும் பயன்படுத்துவோம்...  சட்டப்பேரவையில் மாஸ் காட்டிய மு.க.ஸ்டாலின்

ஒன்றிய அரசு எனக் கூறுவதன் காரணத்தைக் கேட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினருக்கு விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இனியும் அதே வார்த்தையை தான் பயன்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார். 

Malaimurasu Seithigal TV

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், மத்திய அரசு என்று குறிப்பிடாமல் ஒன்றிய அரசு என சொல்வதன் நோக்கம் என்ன? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

அதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசு எனச் சொல்வதை சமூக குற்றம் என நினைக்க வேண்டாம் என்றார். இந்தியா மாநிலங்களை கொண்ட ஒன்றியம் என்றே அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதையே தற்போது பயன்படுத்துவதாகவும், பேரறிஞர் அண்ணா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதும் ஒன்றியம் என்ற வார்த்தையையே குறிப்பிட்டுள்ளார் என்பதையும் முதலமைச்சர் நினைவு கூர்ந்தார். மேலும், ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட்டாட்சி தத்துவம் அடங்கி இருப்பதால் தான் அதை பயன்படுத்துவதாகவும், இனியும் அதை தான் பயன்படுத்துவோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறினார்.

மேலும், தேர்தலில் தங்களுக்கு வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி கொள்வதோடு, வாக்களிக்காதவர்களும் இவர்களுக்கு வாக்களிக்க தவறி விட்டோமே என்று வருத்தப்படும் அளவுக்கு இந்த ஆட்சி நடக்கும் என தொடர்ந்து கூறி வரும் முதலமைச்சர், கோவை உள்ளிட்ட எந்தவொரு மாவட்டத்தையும், எந்நாளும் புறக்கணிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.