தமிழ்நாடு

ராகுல் காந்தி பேசியது ஜனநாயக விரோதமல்ல...மோடியின் ஜனநாயகத்தை தோலுரித்து காட்டுகிற விஷயம்!

Tamil Selvi Selvakumar

இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி வெளிநாட்டில் பேசியது ஜனநாயகத்திற்கு விரோதமானது இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி கூறியுள்ளார்.

அதானி பங்கு சந்தை ஊழலுக்கு துணை போகும் மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ். அழகிரி, கர்நாடகாவில் சாலையை திறந்து வைத்து பேசிய மோடி, நான் இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்கிறேன் என்றும், இந்தியாவினுடைய பாரம்பரியமிக்க ஜனநாயகத்தை வெளி மண்ணில் போய் ஒருவர் தரக்குறைவாக பேசுவதாக ராகுல் காந்தியை சுட்டிக்காட்டி இருக்கிறார். இவை இரண்டும் உண்மைக்கு புறம்பானது என்றும், வன்மையாக கண்டிக்கக் கூடியது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததைவிட தற்போது  மொத்த உள்நாட்டு உற்பத்தியும் இரண்டு சதவீதம் குறைந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

மேலும், இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி வெளிநாட்டில் பேசியது ஜனநாயகத்திற்கு விரோதமானது இல்லை என்றும், மோடி பயன்படுத்துகிற ஜனநாயகத்தை தோலுரித்து காட்டுகிற விஷயம் என்றும் தெரிவித்தார்.