தமிழ்நாடு

ஸ்ரீரங்கத்தில் அதிமுகவின் அதிரடி மீட்சி! திமுகவின் கோட்டையை அசைக்குமா தவெக - நாம் தமிழர் தாக்கம்?

சுமார் 65 வாக்குச்சாவடிகள் யாருக்கு வேண்டுமானாலும் மாறக்கூடிய ஸ்விங் பூத்களாக உள்ளன

மாலை முரசு செய்தி குழு

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தின் ஆன்மீகச் சிறப்புமிக்கத் தொகுதியான ஸ்ரீரங்கம், ஒரு காலத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற முக்கியக் களமாகும். 63 சதவீத கிராமப்புற வாக்குகளைக் கொண்ட இந்தத் தொகுதியில், தற்போது நிலவும் அரசியல் சூழல் அதிமுகவிற்குச் சாதகமாகத் திரும்புவதை இந்த ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஸ்ரீரங்கம் தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களை ஆராய்ந்தால், 41 முதல் 60 வயதுடையவர்கள் 37 சதவீதத்தோடு முதலிடத்தில் உள்ளனர். 26 முதல் 40 வயதுடையவர்கள் 29.4 சதவீதமும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 19.9 சதவீதமும் உள்ளனர். சமூக ரீதியாக முத்தரையர்கள் 35 சதவீதத்தோடு மிகப்பெரிய சக்தியாக உள்ளனர். தேவேந்திர குல வேளாளர்கள் 30 சதவீதமும், பிராமணர்கள் 15 சதவீதமும் உள்ளனர். முத்தரையர் மற்றும் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகளே ஸ்ரீரங்கத்தில் வெற்றியைத் தீர்மானிக்கும் உச்சகட்ட சக்தியாக விளங்குகின்றன.

முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாகக் கோயில் தெருக்களில் வணிகத்தை முறைப்படுத்தாதது மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகள் பக்தர்களுக்குப் பெரும் இடையூறாக உள்ளது. சுற்றுலாப் பருவத்தில் சுகாதார வசதிகள் குறைவாக இருப்பதும், அரசு யாத்திரி நிவாஸ் விடுதி முறையாகப் பராமரிக்கப்படாததும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காவிரி ஆற்றில் கட்டுமானக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுவதால் நதி நீர் மாசுபடுவது இப்பகுதி மக்களின் நீண்ட காலக் கவலையாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் தொகுதி பற்றிய முழு தேர்தல் கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்

தேர்தல் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக இங்கு 47.9 சதவீத வாக்குகளைப் பெற்றது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இது 45.11 சதவீதமாகச் சற்றே குறைந்துள்ளது. அதிமுக 2021-ல் 39.5 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில், 2024-ல் 37.3 சதவீதமாக நீடிக்கிறது. பூத் அளவில் பார்த்தால், 2021-ல் திமுக 152 பூத்களில் வலுவாக இருந்தது, 2024-ல் அது 162 ஆக உயர்ந்துள்ளது. அதிமுக 2021-ல் 91 பூத்களில் வலுவாக இருந்த நிலையில், 2024-ல் 99 பூத்களாகத் தனது செல்வாக்கை உயர்த்தியுள்ளது. சுமார் 37 பூத்கள் ஊசலாடும் ஸ்விங் நிலையில் உள்ளன.

2026 தேர்தல் கணிப்பின்படி, ஸ்ரீரங்கத்தில் அதிமுக 110 வாக்குச்சாவடிகளில் வலுவாக உள்ளது. திமுக 100 வாக்குச்சாவடிகளில் தனது பலத்தைக் கொண்டுள்ளது. சுமார் 65 வாக்குச்சாவடிகள் யாருக்கு வேண்டுமானாலும் மாறக்கூடிய ஸ்விங் பூத்களாக உள்ளன. கான்சிலிடிக்ஸ் குழுவின் கணிப்புப்படி, 2026-ல் அதிமுக 36 சதவீத வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடிக்கும் எனத் தெரிகிறது. திமுக 34 சதவீத வாக்குகளைப் பெறும் நிலையில் உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கூட்டணி 25 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது. வெற்றி வித்தியாசம் சுமார் 2 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்பதால், கடும் போட்டியே நிலவுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.