தமிழ்நாடு

ஆரணி தொகுதியை கைப்பற்றப் போவது யார்? "மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" கருத்துக்கணிப்பு முடிவுகள்

அதிமுக 130 பூத்களில் வலுவான நிலையில் உள்ளதாகவும், திமுக 95 பூத்களில் மட்டுமே வலுவாக

மாலை முரசு செய்தி குழு

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் ஆரணி தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய அடையாளமான ஆரணி பட்டு மற்றும் ஆரணி அரிசிக்கு உலகப் புகழ்பெற்றது. பிரிட்டிஷ் காலத்துப் பழமையான நகராட்சியை உள்ளடக்கிய இந்தத் தொகுதியில், வரும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி நிலவும் அரசியல் மாற்றங்கள் குறித்து விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆரணி தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களை ஆய்வு செய்ததில், 18 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் 13.7 சதவீதம் பேரும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 31.1 சதவீதம் பேரும் உள்ளனர். 41 முதல் 60 வயதுடையவர்கள் 36.9 சதவீதமாகவும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 18.1 சதவீதமாகவும் உள்ளனர். சமுதாய ரீதியாக வன்னியர்கள் 28 சதவீதம் பேர் முதன்மையாக உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக முதலியார் சமூகத்தினர் 18 சதவீதம் மற்றும் ஆதிதிராவிடர்கள் 18 சதவீதம் எனப் பரவலாக உள்ளனர். இது 66 சதவீதம் கிராமப்புறங்களையும், 34 சதவீதம் நகர்ப்புறங்களையும் கொண்ட ஒரு சமநிலையான தொகுதியாகும்.

ஆரணி தொகுதி பற்றிய முழு தேர்தல் கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்

இங்கு நிலவும் முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாக நெசவாளர்களுக்கான கூலி மிகக் குறைவாக இருப்பதும், இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதும் பெரிய குறையாக உள்ளது. நெல் அரவை ஆலைகளில் இருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகளால் பொதுமக்களுக்குச் சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. ஆரணியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக உள்ளது. மேலும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கப் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்பதும், மாணவர்களுக்காகத் தொழில்நுட்பப் பயிலகம் மற்றும் கூடுதல் அரசு கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, அதிமுகவின் சேவூர் ராமச்சந்திரன் 46.4 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். திமுகவின் அன்பழகன் 45 சதவீத வாக்குகளைப் பெற்று கடும் போட்டியை அளித்தார். அந்தத் தேர்தலில் அதிமுக 190 பூத்களில் வலுவாகவும், திமுக 170 பூத்களில் வலுவாகவும் இருந்தது. சுமார் 75 பூத்கள் ஸ்விங் நிலையில் இருந்தன. தொடர்ந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 47.5 சதவீத வாக்குகளைப் பெற்றுத் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது குறிப்பிடத்தக்கது.

'கான்சிலிடிக்ஸ்' குழுவினர் நடத்திய 2026 தேர்தல் கணிப்பின்படி, ஆரணி தொகுதியில் அதிமுக கூட்டணியே மீண்டும் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி 42 சதவீத வாக்குகளைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆளும் திமுக கூட்டணி 38 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட வாய்ப்புள்ளது. தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மற்ற அணிகள் இணைந்து சுமார் 16 சதவீத வாக்குகளைப் பிரிக்கக்கூடும். பூத் வாரியான தரவுகளின்படி, தற்போது அதிமுக 130 பூத்களில் வலுவான நிலையில் உள்ளதாகவும், திமுக 95 பூத்களில் மட்டுமே வலுவாக உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சுமார் 78 பூத்கள் ஸ்விங் நிலையில் உள்ளன. தற்போதைய நிலவரப்படி ஆரணி கோட்டையில் இரட்டை இலை சின்னமே முன்னிலையில் இருப்பதாக இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.