வங்கக்கடலில் நேற்று புயலாக உருவெடுத்த அக்வான், இது மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் தீவிர புயலாகவும் (Severe Cyclonic Storm) , நவம்பர் 19ம் தேதி காலை மிகத் தீவிரப் புயலாக (Very Severe Cyclonic Storm) வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 20ம் தேதி நண்பகல் நெல்லூர் மற்றும் துனி இடையே ஆந்திரப் பிரதேச கடற்கரையை மிகத் தீவிரப் புயலாக (Very Severe Cyclonic Storm) கடக்கக்கூடும். அப்போது மணிக்கு 120 முதல் 130 கி.மீ வேகத்திலும், இடையிடையே மணிக்கு 145 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் கரையைக் கடக்கும் என்றும் தமிழகத்தை நோக்கி திரும்புவாதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் கூறி, தமிழகத்தில் சில பகுதிகள் மற்றும் காரைக்கால் பகுதிக்கு விடப்பட்ட ஆரஞ்சு அலர்ட் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
புயல் செல்லும் பாதையில் தமிழகத்துக்கு எவ்வளவு நெருக்கமாக வருகிறது என்பதைப் பொறுத்து நாளை (18.11.2026) சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை மறுநாள் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான், "ஆந்திராவிற்கு நகர்வதற்கு முன்பு, அக்வான் புயல் கடற்கரைக்கு அருகில் வந்து நமக்கு கணிசமான மழையைத் தரும் என்று நம்புவோம்.
நெல்லூர் மற்றும் மேலும் தெற்கே வந்தால் சென்னையில் கனமழை பெய்யக்கூடும். நெல்லூருக்கு வடக்கே இருந்து மச்சிலிப்பட்டினம் / காக்கிநாடா வரையிலான பகுதிகளுக்கு சென்றால் கனமழை பெய்யாமல் போகலாம்." எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் மற்றொரு பதிவில், "செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் மற்றும் ECMWF இயற்பியல் அடிப்படையிலான மாதிரி ஆகிய இரண்டும் தற்போது ஆந்திராவில் புயல் கரையைக் கடக்கும் திசையுடன் ஒத்துப்போகின்றன." என்றும் கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.