தமிழ்நாடு

கும்பகோணத்தில் வெற்றிக்கொடி நாட்டுமா தி.மு.க.? விஜய் நினைத்தாலும் அசைக்க முடியாத "சாக்கோட்டை அன்பழகன்" - கருத்துக் கணிப்பு முடிவுகள்!

மாலை முரசு செய்தி குழு

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக் கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் கும்பகோணம் தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. கோவில்களின் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணம், டெல்டா பகுதியின் மிக முக்கியமான தொகுதியாகும். தற்போதைய எம்.எல்.ஏ.வாக தி.மு.க.வின் சாக்கோட்டை அன்பழகன் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளார். இத்தொகுதி தற்போது மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வருகிறது.

இத்தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களைப் பார்க்கும்போது, 41 முதல் 60 வயது வரையிலான நடுத்தர வயதுடையவர்கள் 38 சதவீதமும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 29 சதவீதமும் உள்ளனர். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 20 சதவீதம் பேர் உள்ளனர். சாதி ரீதியான அடிப்படையில் சௌராஷ்டிரா சமூகம் 20 சதவீதத்துடன் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. பிராமணர்கள் 18 சதவீதமும், முஸ்லிம்கள் 15 சதவீதமும் வசிக்கின்றனர். ஆதிதிராவிடர்கள் 10 சதவீதமும், முக்குலத்தோர் 8 சதவீதமும் இத்தொகுதியில் உள்ளனர். நகர்ப்புற மக்கள் 65 சதவீதம் பேரும், கிராமப்புற மக்கள் 35 சதவீதம் பேரும் வசிக்கும் இத்தொகுதியில் ஆன்மீகச் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகம்.

கும்பகோணம் தொகுதியின் முழு கருத்து கணிப்பு பற்றி தெரிந்து கொள்ள : இங்கே கிளிக் செய்யவும்

கும்பகோணம் தொகுதியின் முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாகத் திடக்கழிவு மேலாண்மை மற்றும் குறுகிய சாலைகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பெரும் குறையாக உள்ளது. சர்வதேசச் சுற்றுலாத் தலம் என்ற அளவிற்கு இங்கு உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பது மக்களின் பிரதான புகாராகும். கோடை காலங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு, தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை, புறநகர் பேருந்து நிலையம் அமைத்தல் போன்றவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. பட்டு நெசவுத் தொழிலாளர்களுக்கு நவீன சந்தை மற்றும் மானிய வசதிகள் தேவை என்பதும் இத்தொகுதி மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, தி.மு.க. வேட்பாளர் சாக்கோட்டை அன்பழகன் 49.49 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஸ்ரீதர் வாண்டையார் 38.1 சதவீத வாக்குகளைப் பெற்றார். அப்போது தி.மு.க. 94 வாக்குச் சாவடிகளில் (Booths) பலமாகவும், அ.தி.மு.க. 67 சாவடிகளில் மட்டுமே பலமாகவும் இருந்தன. சுமார் 54 சாவடிகள் யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு அளிக்கக்கூடிய (Swing Booths) நிலையில் இருந்தன.

2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி இத்தொகுதியில் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தது. அப்போது தி.மு.க. 134 சாவடிகளில் வலுவாகவும், அ.தி.மு.க. 140 சாவடிகளில் பலவீனமாகவும் இருந்தன.

"கான்சிலிடிக்ஸ்" குழுவின் 2026 தேர்தல் கணிப்பின்படி, கும்பகோணம் தொகுதியில் தி.மு.க. மீண்டும் கம்பர்ட்டபிளான நிலையில் உள்ளது. இந்த ஆய்வின்படி தி.மு.க. 41 சதவீத வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. 33 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழக வெற்றி கழகம் 12 சதவீத வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 7 சதவீத வாக்குகளையும் பிரிக்க வாய்ப்புள்ளது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையிலான வெற்றி வித்தியாசம் சுமார் 8 சதவீதம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய சூழலில் தி.மு.க. வேட்பாளர் சாக்கோட்டை அன்பழகன் 150 வாக்குச் சாவடிகளில் முன்னிலையில் உள்ளார். அ.தி.மு.க. 105 சாவடிகளில் வலுவாக உள்ளது. வெறும் 25 சாவடிகள் மட்டுமே ஊசலாடும் நிலையில் (Swing) இருப்பதால், தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு மிக அதிகமாகத் தெரிகிறது. சாக்கோட்டை அன்பழகன் ஏற்கனவே 2011-ல் தி.மு.க. பின்னடைவைச் சந்தித்த போதே வெற்றி பெற்றவர் என்பதும், தற்போதைய கூட்டணி பலமும் அவருக்குச் சாதகமாக உள்ளது. பி.ஜே.பி. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இங்கு போட்டியிட்டாலும், தி.மு.க.வின் வாக்கு வங்கியைப் பாதிப்பது கடினம் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.