தமிழ்நாடு

காட்பாடி கோட்டையைத் தக்கவைப்பாரா துரைமுருகன்? 2026-ல் ஏற்படப்போகும் அரசியல் மாற்றம் என்ன? - கருத்துக்கணிப்பு முடிவுகள்

அதிமுக 120 பூத்களில் வலுவாக உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன

மாலை முரசு செய்தி குழு

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் காட்பாடி தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்தின் மிக முக்கியமான தொகுதியான காட்பாடி, திமுகவின் மூத்த தலைவர் துரைமுருகன் அவர்களின் கோட்டையாகக் கருதப்படுகிறது. எட்டு முறை வெற்றி பெற்றுள்ள அவரது நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்தத் தொகுதியில், வரும் தேர்தலில் மக்களின் மனநிலை என்ன என்பது குறித்து விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

காட்பாடி தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களை ஆய்வு செய்ததில், 18 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் 12.7 சதவீதம் பேரும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 30 சதவீதம் பேரும் உள்ளனர். 41 முதல் 60 வயதுடையவர்கள் 37.9 சதவீதமாகவும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 18.9 சதவீதமாகவும் உள்ளனர். சமுதாய ரீதியாக வன்னியர்கள் 25 சதவீதம் பேர் முதன்மையாக உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக ஆதிதிராவிடர்கள் மற்றும் முதலியார் சமூகத்தினர் தலா 17 சதவீதம் பேரும், நாயுடு மற்றும் யாதவ சமூகத்தினர் தலா 10 சதவீதம் பேரும் உள்ளனர். இது 52 சதவீதம் நகர்ப்புறங்களையும், 48 சதவீதம் கிராமப்புறங்களையும் கொண்ட தொகுதியாகும்.

காட்பாடி தொகுதி பற்றிய முழு தேர்தல் கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்

இங்கு நிலவும் முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாகக் காட்பாடி ரயில்வே கேட் பகுதியில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக உள்ளது. பாலாற்றில் தடுப்பணைகள் கட்டி மாநகரக் குடிநீரைப் பாதுகாக்க வேண்டும் என்பதும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. சித்தூர் - வேலூர் நெடுஞ்சாலையில் விபத்துகளைக் குறைக்கச் சாலைகளை விரிவுபடுத்த வேண்டும் என்பதும், அரசுப் பள்ளிகளில் நவீன ஆய்வுக்கூடங்களை அமைக்க வேண்டும் என்பதும் மக்களின் நீண்ட காலக் கோரிக்கைகளாக உள்ளன.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, திமுகவின் துரைமுருகன் 45.6 சதவீத வாக்குகளைப் பெற்று மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் வி. ராமு கடும் போட்டியை அளித்தார். அந்தத் தேர்தலில் திமுக 110 பூத்களில் வலுவாகவும், அதிமுக 107 பூத்களில் வலுவாகவும் இருந்தது. சுமார் 94 பூத்கள் ஸ்விங் நிலையில் இருந்தன. தொடர்ந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி இப்பகுதியில் பெரும் முன்னிலை பெற்றது குறிப்பிடத்தக்கது.

'கான்சிலிடிக்ஸ்' குழுவினர் நடத்திய 2026 தேர்தல் கணிப்பின்படி, காட்பாடி தொகுதியில் திமுக கூட்டணியே மீண்டும் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. வரும் தேர்தலில் திமுக கூட்டணி 38 சதவீத வாக்குகளைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 36 சதவீத வாக்குகளைப் பெற்று மிக நெருக்கமான இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் என்று தெரிகிறது. தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மற்ற அணிகள் இணைந்து சுமார் 14 சதவீத வாக்குகளைப் பிரிக்கக்கூடும். பூத் வாரியான தரவுகளின்படி, தற்போது திமுக 145 பூத்களில் வலுவான நிலையில் உள்ளதாகவும், அதிமுக 120 பூத்களில் வலுவாக உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சுமார் 75 பூத்கள் ஸ்விங் நிலையில் உள்ளதால் காட்பாடியில் இந்த முறை மிகக் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.