கரூர் தவெக பிரச்சாரத்தில் 40 பேர் பலியான விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி முடித்து உரிய நெறிமுறைகள் உறுதி செய்யும் வரை தவெக பொதுக்கூட்டம், பிரச்சார கூட்டங்கள் நடத்த தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கரூரை சேர்ந்த செந்தில் கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள மனுவில், நேற்று கரூரில் நடந்த விஜய் பிரச்சார கூட்டத்தில் தான் கலந்து கொண்டதாகவும், அப்போது
கட்டுக்கடங்காத வகையில் மக்கள் கூட்டம் விஜய்யின் பிரச்சார வாகனத்தை நோக்கி செல்ல முண்டியடித்துள்ளனர்.
இதில் கொத்து கொத்தாக பெண்கள் ,குழந்தைகள் நிலை தடுமாறி கிழே சரிந்து விழுந்தனர். அவர்கள் மீது மக்கள் ஏறி முண்டி அடித்து சென்றபோது அக்கூட்டத்தில் சிக்கி தானும் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்றதாகவும், தன் கண் முன்னே பலர் மூச்சு திணறி மயக்கமடைந்து உயிரிழந்தாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இச்சம்பவம் விபத்து அல்ல என்றும் கூட்டத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள், முறையான திட்டமிடல் இல்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பலியானவர்களுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை மற்றும் ஒரு நபர் விசாரணை ஆணையம் நியமிக்கப்பட்டுள்ளதும் சரியான நடவடிக்கைகளாக இருந்தாலும் மீண்டும் இது போன்ற ஆபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்றும் கரூர் உயிரிழப்புகள் தொடர்பாக விசாரணை முடியும் வரை,
போதுமான பாதுகாப்பு வழிமுறைகள் உறுதி செய்யப்படும் வரை, தவெக தலைவர் விஜய் மற்றும் அக்கட்சி நடத்தும் அரசியல் பொதுக்கூட்டம், பேரணி, பிரச்சார கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கரூர் சம்பவம் பாதிப்பிற்கு காரணமாக நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் முன், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சங்கரன் ஆஜராகி முறையிட்டார்.
முறையீட்ட கேட்ட நீதிபதி இன்று மாலை 4.30 மணிக்கு வழக்கை விசாரணைக்கு எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.