இரண்டு நாட்கள் வார விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் நிரப்பப்படாமல் இருப்பது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பேசினார்.
அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தில் பள்ளிக்கல்வித் துறை மற்றும் உயர்கல்வித் துறை ஆகிய இரு துறைகளும் பட்டியலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், தளபதி விஜய் சார் பட்டியல் இனத்தவரை கவுரவப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து திமுகவை நோக்கி பேசிய அமைச்சர் விஸ்வநாதன், “நீங்கள் ஏதோ இந்த நாட்டிற்காகப் போராடியது போலவும், நீங்கள் ஏதோ சமூகப் புரட்சிக்கு வித்திட்டது போலவும் பேசுகிறீர்கள்” என விமர்சித்தார். இதற்கு பதிலளித்த திமுக முன்னாள் அமைச்சர் கோ வி செழியன், “நீங்கள் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்கிறீர்களே... மேலூர் என்ற பொதுத் தொகுதியில் உங்களை நிற்க வைத்து வெற்றி பெற வைத்து திமுக, இன்று வெற்றி பெற்று அமைச்சராகி உள்ளீர்கள்” என்றார்.
இதற்கு பதிலளிக்க காங்கிரஸ் சார்பாக பேசுவதாக கூறிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனன், “23 கட்சிகளின் கூட்டணியோடு நின்று தேர்தலை சந்தித்தீர்கள். நாங்கள் தனியாக நின்று 108 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளோம். கூட்டணிக் கட்சிகள் இல்லை என்றால் சென்னையில் 2 தொகுதிகளில் கூட நீங்கள் வெற்றி பெற்றிருக்க மாட்டீர்கள்.. தமிழ்நாட்டில் 50 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்க மாட்டீர்கள். இன்று நீங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பதற்குக் காரணம் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தான்” என ஆவேசமாகப் பேசினார். மேலும், “எங்களைப் போல் தனியாக நின்று திமுக தொகுதிகளைத் தொட வேண்டும். அப்போதுதான் கூட்டணிக் கட்சிகளின் அருமை உங்களுக்குத் தெரியும்” என்றும் அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, “கூட்டணியில் நின்றுதான் வெற்றி பெற்றோம் என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். ஆனால், எங்கள் கூட்டணியில் நின்று வெற்றி பெற்றவர்களின் ஆதரவைக் கொண்டுதான் இன்றைக்கு ஆட்சி அமைத்துள்ளீர்கள். உங்களுக்கு அவ்வளவு ரோஷம் இருந்தால், அவர்களை வெளியே அனுப்பிவிட்டு ஆட்சி நடத்துங்கள்” என்றார். மேலும் பேசிய கே.என்.நேரு, “1980-ல் தொண்டு போய் நின்றபோது காங்கிரஸுக்கு கை கொடுத்தது திமுக. திமுக இல்லையென்றால் காங்கிரஸே வந்திருக்காது. எங்களை விட்டு தனியாக நின்று காங்கிரஸ் தமிழ்நாட்டில் எங்கேயாவது வெற்றி பெற்றிருக்கிறதா என்று கேளுங்கள். திமுக இல்லையென்றால் நீங்கள் வெற்றி பெற்றிருக்க முடியாது. மத்தியில் ஆட்சி அமைந்ததற்கும் திமுகதான் காரணம்” எனக் கூறினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், “மத்தியில் 11 அமைச்சர்களைப் பெற்றுக்கொண்டுதான் நீங்கள் அதைச் செய்தீர்கள். அதை மறந்து விடக்கூடாது” என்றார்.
இதனிடையே, “எங்களது பாரத் ஜோடோ யாத்திரையால்தான் திமுகவுக்கு இத்தனை எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கிடைத்தனர்” என காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த முன்னாள் அமைச்சர், கே.என்.நேரு, “இந்தியா முழுவதும் பாரத் ஜோடோ யாத்திரை நடந்தது. ஏன் அங்கு காங்கிரஸ் வெற்றி பெறவில்லை? தமிழ்நாட்டில் மட்டும் 10 இடங்களில் காங்கிரஸ் எம்.பி.க்களை வெற்றி பெற வைத்தது திமுகதான்” என்று அழுத்தமாகக் கூறினார். இதனால் தமிழக சட்டப்பேரவையில் திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வெற்றி குறித்து அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது.