தமிழ்நாடு

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்கள்....! 12 கிலோ கஞ்சா பறிமுதல்..!

சென்னை கொடுங்கையூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்கள் உட்பட ஒன்பது பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

சென்னை கொடுங்கையூர் பகுதியில் இரவு நேரங்களில் குறிப்பிட்ட ஒரு வீட்டிற்கு அதிக நபர்கள் வந்து செல்வதாகவும் மேலும் அந்த வீட்டில் சட்டத்திற்கு புறம்பான வேலைகள் நடப்பதாகவும் கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 12 பேர் கொண்ட காவல் துறையினர் நேற்று இரவு கொடுங்கையூர் எருக்கஞ்சேரி, இந்திரா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். அந்த வீட்டிலிருந்த இரண்டு பெண்கள், ஒரு திருநங்கை என 9 பேரையும்  போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.  மேலும் அந்த வீட்டில் இருந்து 12 கிலோ கஞ்சா, ஐந்து கத்தி, மூன்று இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்த வீட்டின் உரிமையாளர் தாரணி (24) என்பதும் அவரது அக்கா வினோதினி (25) என்பதும் தெரிய வந்தது. 

இதில் தாரணி மீது கஞ்சா வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. வினோதினி மீதும் கஞ்சா வழக்குகள் பல உள்ளன. இவர்கள் இரண்டு பேரும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கொள்முதல் செய்து  ஆட்களை வைத்து வட சென்னையில் பல்வேறு இடங்களில் ஹரிஹரன், மதன், ஆல்பர்ட், கவியரசன், ஜீவானந்தம் ஆகிய ஏழு பேரின் உதவியுடன் கஞ்சாவை வாங்கி, அதை பல்வேறு இடங்களுக்கு சென்று விற்று வந்ததும் தெரிய வந்தது.  இதனை அடுத்து நேற்று அக்கா, தங்கை இருவர் உட்பட ஒன்பது பேர் மீதும் வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார்  அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.