தமிழ்நாடு

இந்திய அரசுக்கு, உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம்!

Malaimurasu Seithigal TV

டெல்லியில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்களை கைது செய்ததற்கு இந்திய அரசுக்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் மல்யுத்த வீராங்கணைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முன்னணி மல்யுத்த வீராங்கணைகளான வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக், சங்கீதா புனியா மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 38 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.

இவர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்காத நிலையில் கடந்த 27 ஆம் தேதி நாடாளுமன்ற  புதிய கட்டடம் நோக்கி பேரணி நடத்தினர். இதையடுத்து அவர்களை  போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ததுடன் வழக்கு பதிவு செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்களை கைது செய்ததற்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் புகார் தொடர்பான விசாரணையில் இதுவரை எந்த முடிவும் எட்டப்படாதது ஏமாற்றமளிப்பதாகவும், குற்றச்சாட்டு குறித்து முழுமையான மற்றும் பாரபட்சமில்லாத விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. 

மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கப்படும் எனவும், அவர்களின் பாதுகாப்பு குறித்து உலக மல்யுத்த கூட்டமைப்பு மீண்டும் விசாரிக்கும் எனவும் கூறியுள்ளது. மேலும், இந்திய ஒலிம்பிக் கமிட்டி மற்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு தேர்தல் நடத்தி உறுப்பினர்களை தேர்வு செய்ய 45 நாட்கள் கெடு விதித்துள்ள நிலையில், தவறினால் இந்திய மல்யுத்த கூட்டமைப்பை  இடைநீக்கம் செய்ய நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.